Monday, September 4, 2017

புவனேஸ்வரின் பந்து வீச்சில் வீழ்ந்தது இலங்கை



பிரேமதாசா ஸ்ரேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  இலங்கைக்கு எதிரான  ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெற்றால் வெற்றி பெற்ற இந்தியா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதால் கடைசிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை வீரர்கள் களம் இறங்கினர்.

இலங்கை அணியின் தலைவர்  தரங்க இடம்பெற்றதால் குசல் மென்டிஸ் வெளியேற்றப்பட்டார். இந்திய அணியில்  தவான்,பண்டையா ஹர்த்திக் பண்டையா,அக்சர் படேல், ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு ரஹானே,கேதர் யாதவ்,புவனேஸ்வர் குமார்,யுவேந்திர சாகல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மழை காரணமாக அரை மணிநேரம் தாமதமாகப் போட்டி ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று   முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை  49.4  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து  238  ஓட்டங்கள் எடுத்தது. 46.3   ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்த இந்தியா 239  ஓட்டங்கள் எடுத்து ஆறு விக்கெற்களால் வெற்றி பெற்றது.







ஆரம்பது துடுப்பாட்ட வீரரான டிக்வெலவும்  முனவீரவும் புவனேஸ்வர் குமாரின் வேகத்தால் வெளியேறினர்.தரங்கவும் திரிமானேயும் .இணைந்தனர். அதிரடிகாட்டிய தகரங்க 48  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நான்காவது இணைப்பாட்டமாக விளையாடிய மத்தியூஸ் திரிமானே ஜோடி சற்று நம்பிக்கையளித்தது. இவர்கள் இருவரும்  இணைந்து இந்தத் தொடரில் முதன் முதலாக சதத்தை எட்டிப்பிடித்தனர்.  இந்திய வீரர்களை மிரட்டி 122 ஓட்டங்கள் எடுத்த  இந்த ஜோடியை புவனேஸ்வர் குமார் பிரித்தார்.  67  ஓட்டங்கள் எடுத்த திரிமானே  ஆட்டமிழந்தார். 

இலங்கை அணி 38.5 ஓவர்களில் நான்கு விக்கெற்களை  இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தபோது திரிமானே ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மத்தியூஸும் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் கடைசி ஏழு விக்கெற்கள் 53 ஓட்டங்களில் வீழ்ந்தது  இலங்கை  49.4  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து  238  ஓட்டங்கள் எடுத்தது.  

 புவனேஸ்வர் குமார் 9.4 ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெற்களை வீழ்த்தினார்  இதுவே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.பும்புரா இரண்டு விக்கெற்களையும் சாஹல் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றைக் கைப்பற்றினர்.
 




ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரஹானே 5  ஓட்டங்களிலும் ரோகித் சர்மா 16  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.  மூன்றாவது இணைப்பாட்டத்தில் சேர்ந்த கோஹ்லி , மனிஷ் பாண்டே ஜோடி நிலைத்து நின்று விளையாடி ஓட்ட சராசரியை அதிகரித்தது.  இவர்கள் இருவரும் இணைந்து 99  ஓட்டங்கள் எடுத்தனர். பாண்டே 36  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நான்காவது இணைப்பாட்டத்தில் கோஹ்லியுடன் இணைந்தார்  கேதார் யாதவ். இவர்கள் இருவரும் இணைந்து 109 ஓட்டங்கள் எடுத்தனர். 63  ஓட்டங்களில்  கேதார் யாதவ் ஆட்டமிழந்தார். வெற்றி பெறுவதற்கு இரண்டு ஓட்டங்கள் இருந்தபோது களம் இறங்கிய டோனி ஒரு ஓட்டம் எடுத்தார். ஒரு ஓட்டம் எடுத்து கோஹ்லி வெற்றியை  உறுதி செய்தார்.  கோஹ்லி ஆட்டமிழக்காது 110 ஓட்டங்கள் எடுத்தார்.  இந்த ஆண்டு 18  போட்டிகளில் விளையாடிய கோஹ்லி 1000  ஓட்டங்கள் அடித்தார்.

ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமாரும் தொடர் நாயகன் விருதை  பும்புராவும் பெற்றுக்கொண்டனர்.. 30 ஆவது சதமடித்த கோஹ்லி , ரிக்கி பொண்டிங்கின் சாதனையை சமப்படுத்தி உள்ளார்.
 




No comments: