Monday, September 18, 2017

டோனி பண்டைய்யா அதிரடி இந்தியா வெற்றி



சென்னையில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரன முதலாவது ஒருநாள் போட்டியில் டக்வொர்த்லீவிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. டோனி,பண்டையா,புவனேஸ்வர் குமார் ஆகியோரின் அதிரடியான துடுப்பாட்டம் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

இந்தியா அவுஸ்திரேலிய   அணிகளுக்கிடையேயான   ஐந்து  ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அவுஸ்திரேலிய அணியில் ஹில்டன் கார்ட்ரைட் அறிமுக வீரராக இடம் பிடித்தார். இந்திய அணியில் மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டதால் லோகேஷ் ராகுல் விளையாடும் இனியில் இடம் பெறவில்லை..

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித தலைவர்  கோஹ்லி  துடுப்பட்டத்தைத் தேர்வு செய்தார்.  ரஹானே, ரோகித் சர்மா ஜோடி இந்தியாவின் இன்னிங்சைத் தொடங்கினர். அவுஸ்திரேலிய வீரர்களின்   வேகப்பந்து வீச்சு இந்திய வீரர்களுக்கு  நெருக்கடியைக் கொடுத்தது.   இதனால் இந்திய அணி வீரர்கள் தாக்குப்பிடிக்கா முடியாது  வெளியேறினர்.





ஐந்து ஓட்டங்கள் எடுத்தபோது    நாதன் கவுல்டர் நிலேவின் வேகத்தை எதிர்கொண்ட ரஹானே  விக்கெற் கீப்பர் மேத்யூ வேட்டிடம்  பிடிகொடுத்து  கொடுத்து     வெளியேறினார். அடுத்து வந்த கப்டன்  விராட் கோஹ்லி   ஓட்டம் எடுக்காது கவுல்டர் நிலேவின் இன்னொரு ஓவரில் வீழ்ந்தார். கோஹ்லி அடித்த ஷாட்டை, மேக்ஸ்வெல் துள்ளிக்குதித்து ஒரு கையில் அற்புதமாகப் பிடித்தார்.  . அதே ஓவரின் 3 ஆவது  பந்தில் மனிஷ் பாண்டேயும் ஓட்டமேடுக்காது   விக்கெற் கீப்பர் மேத்யூ வேட்டிடம் சிக்கினார். இந்திய அணி 5.3 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு  3 விக்கெற்களை பறிகொடுத்து தத்தளித்தது.

இதன் பின்னர் 4ஆவது விக்கெற்றுக்கு கேதர் ஜாதவ்,  ரோகித் சர்மாவுடன் இணைந்தார். கேதர் ஜாதவ் தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஓட்டக் கணக்கைத் தொடங்கினார். அது தான் இந்திய அணியின் முதல் பவுண்டரியாகும். அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்த இந்தியா 64 ஓட்டங்களை எட்டிய போது இந்த ஜோடி  பிரிந்தது. 28 ஓட்டங்கள்  எடுத்த  ரோகித் சர்மா  மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீச்சை அடித்து ஆடி நாதன் கவுல்டர் நிலேவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 53 ஓட்டங்கள் எடுத்தனர்.





   5 ஆவது விக்கெற்றில் கேதர் ஜாதவுடன் டோனி இணைந்தார். 40 ஒட்டங்கள் எடுத்த கேதர் யாதவ்   வெளியேறினார்.  அப்போது இந்திய அணி 21.3  ஓவர்களில்  ஐந்து விக்கெற்களை இழந்து 87 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அவுஸ்திரேலியாவின் கை மேலோங்கியது. 6 ஆவது விக்கெற்றில் இணைந்த டோனி,பண்டைய்யா ஜோடி திருப்பு முனையை ஏற்படுத்தியது. டோனி நிதானமாகவும் பண்டைய்யா அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்தனர். சுழற்பந்து வீச்சாளர் அடம் ஜம்பாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு   ஒரு பவுண்டரியும் விளாசி அமர்க்களப்படுத்தினார். அத்துடன் தனது 3 ஆவது அரைசதத்தையும் எட்டினார். பாகிஸ்தான்,  இலங்கை ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளின் போதும் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை அடித்து அமர்க்களப் படுத்தியவர் பண்டைய்யா.

டோனிபண்டைய்யா   பொறுப்பான துடுப்பாட்டத்தால்   இந்திய அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்றது.  40.5  ஓவர்களில் இந்திய அணி  205 ஓட்டங்கள் எடுத்தபோது அடம் ஜம்பாவின் பந்து வீச்சில் மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க முயற்சித்த   பவுல்க்னெரின் கையில்  பந்து  தஞ்சம் புகுந்தத  66  பந்துகளுக்கு முகம் கொடுத்த பண்டைய்யா 5  பவுண்டரி 5 சிக்ஸர் அடங்கலாக 83 ஓட்டங்கள் எடுத்தார்   . டோனிபண்டைய்யா  கூட்டணி 6–வது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து இறங்கிய புவனேஷ்வர்குமார், டோனிக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். நிலைத்து நின்று விளையாடி அணியை நிமிர வைத்ததில் முக்கிய பங்கு வகித்த டோனி 75 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் தனது 66ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுவரை பொறுமை காத்த டோனி இறுதிக் கட்டத்தில் பவுண்டரிகளும், இமாலய சிக்சர்களும் விளாசி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். அவர் 79 ஓட்டங்கள்  (88பந்து, 4 பவுண்டரி, 2 சிக்ஸர் ) சேர்த்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஜாதவுடன் 23 ஓட்டங்களும் பண்டைய்யாவுடன் 118 ஓட்டங்களும் புவனேஸ்வர் குமாருடன் 72  ஓட்டங்களும் எடுத்த டோனி காத்திரமான பங்கு வகித்தார்.





50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281  ஓட்டங்கள்  குவித்தது. கடைசி 14 ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் 133 ஓட்டங்கள்  சேகரித்து அசத்தினர். புவனேஷ்வர்குமார் 30 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 32 ஓட்டங்களும், குல்தீப் யாதவ்ஓட்டம் இன்றியும்    களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெற்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெற்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை குறுக்கிட்டது. மழை சீக்கிரமாக நின்றாலும், ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் 2½ மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த்லீவிஸ் விதிமுறைப்படி 21 ஓவர்களில் 164 ஓட்டங்கள்  எடுக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவின் வெற்றி  இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிடில் வரிசையில் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மட்டும் அச்சுறுத்தும் வகையில் ஆடினார். குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் பவுண்டரி, 3 சிக்ஸர்  அடித்து நொறுக்கினார். மேக்ஸ்வெல் (39 ஓட்டங்கள், 18 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்ஸர் ) யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் சிக்க அதன் பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.

நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் அந்த அணியால் 9 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்களே  எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 26 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெற்களும், ஹர்திக் பண்டைய்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெற்களும் வீழ்த்தினர். ஆல்ரவுண்டராக ஜொலித்த பண்டையா  ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2வது ஒரு நாள் போட்டி வருகிற 21 ஆம் திகதி கொல்கத்தாவில் நடக்கிறது.









No comments: