Thursday, September 1, 2016

தமிழக அரசை எச்சரிக்கும் அவதூறு வழக்குகள்

 சர்வதிகார ஆட்சியிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடும் கொடுமைகள் சொல்லிலடங்கதவை.இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பது சர்வதிகார ஆட்சியாளர்களின் மரபுவழித் தண்டனை. ஜெயலலிதாவின்  தலைமையிலான தமிழக அரசு அவதூறு வழக்கு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. 2011  ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 213 அவதூறு  வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அரசையும் ஜெயலலிதாவையும் விமர்சித்தால் அல்லது கேள்விகேட்டால் அவர்கள் மீது அவதூறு  வழக்குகள் தொடுக்கப்படும். கருணாநிதி,ஸ்டாலின் உட்பட திராவிட முன்னேற்றக் கழக‌  தலைவர்களுக்கு எதிராக 85,  நக்கீரன், ஆனந்தவிகடன்,யூனியர் விகடன்,இந்தியருடே உட்பட ஊடகங்களுக்கு எதிராக  55, விஜயகாந்த்,பிரேமலதா உட்பட அவரது கட்சிக்கு எதிராக  28 , ராமதாஸ், அன்புமணி ஆகியோர் உட்பட பட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரக 9 தமிழக காங்கிரஸ் கட்சித் தாலைவர்களுக்கு எதிராக 7  சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 3  அவதூறு  வழக்குகளை தமிழக அரசு தொடுத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளையும் ஜெயலலிதா தாக்கல் செய்யும் அவதூறு  வழக்குகளையும் கவனிப்பதிலேயே தமிழக  அரச வழக்கறிஞர்கள்  காலத்தைக் கடத்துகிறார்கள். தமிழக மக்கள் வெள்ளத்தில் துன்பப்படும்போது ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று பொதுக் கூட்டத்தில்  பேசினால் அவர்மீதுஅவதூறு  வழக்கு பாயும். ஜெயலலிதாவுக்கு  எதிராகப் பேசினால் மட்டும் தான் அவதூறு  வழக்கு தொடுக்கப்படும் அக்கட்சியில் உள்ள ஏனைய தலைவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது விமர்சித்தால் அவதூறு  வழக்குகில் இருந்து தப்பிவிடலாம்.


ஒருவரைப்பற்றி  இல்லாததும் பொல்லாததும் சொன்னால்  அவதூறு  வழக்கு தொடுக்கலாம்.கருத்துச் சொல்பவர்களின் மீதும் கேள்வி கேட்பவர்களின் மீதும் அவதூறு  வழக்கு தொடுத்து கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது தமிழக அரசு. ஜெயலலிதாவுக்கு எதிராக சுமார் 25 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கைத் தவிர அனைத்து வழக்குகளும் முடிந்துவிட்டன. சில வழக்குகளில் இருந்து எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். சில வழக்குகளில் குற்றவளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேல் முறையிட்டின் பின் நிரபராதி என விடுதலையானர். நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு,   அப்பீல் என்பன ஜெயலலிதாவுக்கு புதியதல்ல.

ஜெயலலிதா தாக்கல் செய்த அவதூறு   வழக்குகளை சட்டப்படி சந்திக்கப்போவதாக எதிர்த்தரப்புகள் தெரிவித்துள்ளன. தனக்கு எதிரான அவதூறு   வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை பெற்றுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது ஜெயலலிதாவுக்கு சற்று பின்னடைவாகும். அவதூறு   வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விஜயகாந்துக்கு எதிராக பிடிவிறந்து பிறப்பிக்கப்பட்டது. தனக்கு எதிரான அவதூறு  வழக்கின் நிபந்தனைகளைக் குறைக்குமாறு கோரியதால் பிரேமலதாவுக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இவை ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்தன.

ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்த அவதூறு வழக்குகள் இப்போது அவருக்கும் தமிழக அரசுக்கும் எதிராகத் திரும்பிவிட்டன. அவதூறுவழக்குக்கு எதிராக விஜயகாந்த் தாக்கல் செய்த மேன் முறையீட்டை விசாரித்த  நீதிபதிகளின் கேள்விகள் தமிழக  அரசையும் ஜெயலலிதாவையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளன. பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இது தொடர்பாக பதிலளிக்கும் கடிதம் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது. அப்படி ஒரு கடிதம் கிடைக்கவில்லை என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.  அப் பதிலைக் கேட்ட நீதிபதிகள் அக் கடிதத்தை ஜெயலலிதாவிடம் கையளிக்குமாறு விஜயகாந்தின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். கடிதம் கிடைக்கவில்லை என பதில் சொல்ல முடியாது.
தனது அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்குவதற்காக ஜெயலலிதா தொடுத்த அவதூறு வழக்குகள் அவருக்கு எதிராகத் திரும்பத் தொடங்கிவிட்டன.நீதிமன்றம் கேட்கும் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு தெளிவான பதிலளிக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் முறை கேடுகள் தொடர்பாக பொது நல வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன. அப்படித் தொடுக்கப்பட்ட சுமார் 15 வழக்குகளில் தமிழக அரசு மூக்குடைபட்டு   நிற்கிறது.     அரசின் தலமைச் செயலகத்தை  புதிய இடத்தில் கட்டுவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். அவரது முயற்சி கைகூடவில்லை. கருணாநிதி முதலமைச்சாரக இருந்தபோது புதிய தலமைச்செயலகத்தை அமைத்தார். கருணாநிதி கட்டிய தலமைச் செயலகத்தினுள் செல்லப்போவதில்லை என சபதம் செய்த ஜெயலலிதா  முதலமைச்சரானதும்  பழைய தலமைச் செயலகத்தில் சட்ட சபையை கூட்டினார்.

அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அண்ணா நூற்றாண்டு  வாசிகசாலை அமைக்கப்பட்டது. அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஜெயலலிதா முதல்வரானதும் அண்ணாவின் பெயரில் உள்ள அந்த  நூற்றாண்டு மண்டபத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார். அதனை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆறு மாதகால அவகாசம் தரும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. முடிவெடுப்பதற்கு ஒரு நொடி ஒரு நொடியில் முடிவெடுப்பீர்க‌ள். பதிலளிப்பதற்கு ஆறு மாதம் வேண்டுமா என நிதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சுமார் இருபது வருடங்களை வழக்குகளைச் சந்திப்பதற்கு செலவிட்டுள்ளார். நீதிமன்றத்தால் இரண்டு முறை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் விடாது போராடி பதவியை இரண்டு முறையும் மீளப் பெற்றவர். இப்போது ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள வழக்குகள் அவருக்கு எதிராகத் திசை திரும்பும் அபாயம் உள்ளது.
வர்மா


No comments: