Saturday, July 23, 2016

கட்சிகளின் வெளியேற்றத்தால் நலிந்துபோன கூட்டணி

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுக்கட்சி என்ற பெயருடன் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நலக் கூட்டணி படு தோல்வியடைந்தது. கட்சித் தலைவர்கள்  கட்டுப்பணத்தை இழந்து பரிதாபமாகத் தோல்வியடைந்தனர். தேர்தல் காலங்களில் ஏதோ ஒரு அலை அடித்து ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதே வாடிக்கை. ஆனால், அண்மையில் நடைபெற்ற தமிழகத் தேர்தலில் எந்த விதமான அலையும் அடிக்காது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதாவை அசைக்கும் பலம் கருணாநிதிக்கு மட்டும் உள்ளதால்  அவருடன் விஜயகாந்த் சேரக்கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக இருந்தார். ஜெயலலிதா நினைத்தது போலவே கருணாநிதியுடன் விஜயகாந்த்  கூட்டணி சேரவில்லை.


திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்தை இணைக்கும் இரகசியத்திட்டம்  வெற்றி பெற்றுவிட்டதை அறிந்த கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று பூடகமாகத் தெரிவித்தார். விஜகாந்தின் வருகையை கருணாநிதி ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வேளையில் மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்த முதலமைச்சர் என்ற கனவுட தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்டுப்பணத்தைப் பறிகொடுத்தார்.  ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராகலாம் என்ற  நம்பிக்கையில் இருந்த விஜயகாந்த் அதிர்ச்சியில்  இருந்து இன்னமும் விடுபடவில்லை.
மக்கள் நலக்கூட்டணியின் படு தோல்வியில் இருந்து அக்கட்சித் தலைவர்கள் மீளமுன்னர் எதிர்பார்த்த தோல்வி என வைகோ கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தமிழக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வைகோ விலகியதில் இருந்து தோல்வியை அவர் உணர்ந்துள்ளார் என அறிய முடிகிறது. கடைசிவரை அதனை வெளிக்காட்டாது மூடி மறைத்துள்ளார். தேர்தல் தோல்வியின் பின்னர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கூடிப்பேசி தோல்விபற்றி விவாதிக்கவில்லை. அரச இயந்திரமும் பணநாயகமும் வென்றுவிட்டது என அறிக்கைவிட்டனர்.

மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியால் வைகோ கவலைப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வி அவரை உற்சாகப்படுத்தி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த்  சேர்ந்திருந்தால் கருணாநிதி முதல்வராகி இருப்பார். விஜயகாந்தின் கட்சி 20 ஆசனங்களைப் பெற்றிருக்கும் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். தனது இராஜதந்திரத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது என வைகோ கொக்கரிக்கிறார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டும் தான் வெற்றி பெற்றன மற்றைய கட்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன என்பது வைகோவுக்குத் தெரிந்த உண்மைதான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
 சினிமாவில் இருந்து அரசியலில்   கால் ஊன்றிமெது மெதுவாக   உயரத்துக்குச் சென்று கொண்டிருந்த  விஜயகாந்தை தேர்தல் முடிவு குப்புற கவிழ்த்து விழுத்தியது. வைகோவுடன் சேர வேண்டாம் என  விஜயகாந்தின் கட்சியினரே அவருக்கு ஆலோசனை கூறினர். மனைவி பிரேமலதாவின் பேச்சைக் கேட்டதனால் வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கிறார் விஜயகாந்த். தோல்வியைக் கண்டு மக்கள் நலக்கூட்டணி அஞ்சாது என  வைகோ அறிக்கை விடுத்தார்.  ஏனைய  தலைவர்கள் அனைவரும் பேசாமடந்தையாக இருந்தனர். மிகுந்த இழுபறியின் மத்தியில்  மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்த விஜயகாந்த் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
Add caption
 விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் ஓடிப்போவதைத் தடுக்க வேண்டிய கடமை விஜயகாந்துக்கு உள்ளது.  அதன் காரணமாக மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேறிவிட்டார்.   இதனால் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள்   ஆறுதலடைவார்கள் என அவர் நினைக்கிறார்.விஜகாந்தைத் தொடர்ந்து வாசனும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். இவர்கள் இருவருக்கும் போக்கிடம் எதுவும் இல்லை. அடுத்து என்ன செய்வது என்ற திட்டமும் அவர்களிடம் இல்லை. தமிழர் முன்னேற்றப்படைத் தலைவி வீரலட்சுமியும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.

மக்கள் நலக்  கூட்டணியின் பலம் என்று நினைத்த விஜயகாந்தும் வேறு வழி இல்லாமல் கூட்டணியில் சேர்ந்த வாசனும் வெளியேறியதால் கூட்டணிக்கு எதுவிதபாதிப்பும் இல்லை என்று வழக்கம் போல வைகோ அறிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர்களில் ஒருவரான திருமாவளவன்  மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையப்போவதாக செய்திகள்  வெளிவந்துள்ளன. அந்தச் செய்திகளை திருமாவளவன் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஏதோஒரு உண்மை இருப்பதால் வதந்தி முதலில் வந்துள்ளது.

மாகிஸ்ட் , கொம்யூனிஸ் கட்சிகளும் வைகோவும் தனிமைப்பட்டுள்ளனர். ஆறு பெரிய கட்சிகளுடன் இருந்த மக்கள் நலக் கூட்டணி  நான்கு கட்சிகளாகச் சுருங்கி உள்ளது. அணி மாறுவதற்கான தருணத்தை எதிர்பர்த்து திருமாவளவன் காத்திருக்கிறார். மூன்று கட்சிகளின் கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி மாறிவிடும் நிலை உள்ளது. இரண்டு பெரிய தேர்தல்களில் தோல்வியடைந்த கருணாநிதி உள்ளாட்சித்  தேர்தலில்  வெற்றி பெறுவதற்கான சூத்திரத்தைத் தேடுகிறார். ஆகையால் புதிய கூட்டணிக்கான சாத்தியம் உள்ளது.
வர்மா




No comments: