Saturday, April 23, 2016

வைகோவுக்கு முன்னால் காத்திருக்கும் சவால்

தமிழக  அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மிளிர்ந்த  வைகோவை பிரதான திராவிடக் கட்சிகள் இரண்டும் திட்டமிட்டு ஓரம் கட்டின. வைகோவின் அரசியல் முடிவடைந்து விட்டது என்றே பிரதான கட்சிகள் இரண்டும் நம்பி இருந்தன.   திராவிட முன்னேற்றக் கழக‌ம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆகியவற்றால் கழற்றி விடப்பட்ட கட்சிகளை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்ற வைகோ பலமான மூன்றாவது அணியை உருவாக்கினார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தில் இருந்து வெளியேறினால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம். இரண்டு கழகங்களும் இல்லை என்றால் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதாக் கட்சி என்ற வரைமுறையை உடைத்து  மூன்றாவது அணியை உருவாக்கி  புதிய ஒரு அரசியல் பாதையை அமைத்துள்ளார் வைகோ.

திராவிட முன்னேற்றக் கழக‌ம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆகியவற்றை நம்பி ஏமாந்த கட்சிகள் அனைத்தும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயருடன்  ஓரணியில் நிற்கின்றன.வைகோ, திருமாவளவன்,இடதுசாரித் தலைவர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் பாதையை உருவாக்கினார்கள். விஜயகாந்த், வாசன் ஆகியவர்களையும் தம்முடன் இணையும்படி அறைகூவல் விடுத்தனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர ஏனைய கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் இறுதித் தருணத்தில் மக்கள் நலக் கூ ட்டணியில் இணைந்தார். ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக கடைசிவரை காத்திருந்து ஏமாந்த வாசன் போக்கிடம் இன்றி மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார் பலத்த இழுபறியின்  பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப்பங்கீடு முற்றுப் பெற்றது. 

மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பின்னர்     மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதிமுக முறை அவர்  ராஜ்யசபை உறுப்பினராக இருந்துள்ளார்.

அரசியல் போராளியாக அறியப்பட்டாலும் தேர்தலுக்கும் வைகோவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். போட்டியிட்ட பல தேர்தல்களில் அவர் தோல்வியையே பரிசாக பெற்றுள்ளார். இம்முறை கோவில்பட்டி அந்த மோசமான சரித்திரத்தை மாற்றி எழுதுமா என்பதே   தொண்டர்கள் எதிர்பார்ப்பு. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 1996ம் ஆண்டு முதன்முறையாக சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  போட்டியிட்டது.

 ஒரு தொகுதியிலும்   வெற்றி பெற முடியவில்லை. வைகோ தான் போட்டியிட்ட விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் தோற்றார். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலின்போது சிவகாசி தொகுதியிலும் தோல்வியே கிடைத்தது வைகோவுக்கு.


  1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வைகோ வெற்றிபெற்றார். 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியை சேர்ந்தவருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ், மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.   

   ஆனால் 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத்தான் தழுவினார். 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்துவிட்டார்.

 2014 நாடாளுமன்றத்  தேர்தலில்  பாரதீய ஜனதாக்  கூட்டணியை தமிழகத்தில் அமைக்க   முனைப்பாக உழைத்த வைகோ, விருதுநகரில் மீண்டும் தோற்றார். ஜெயலலிதாவின் அலையில் வைகோவும் அடித்து செல்லப்பட்டார்

 தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாக பார்க்கப்படும் வைகோ, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் உடனுக்குடன் குரல் கொடுப்பவர். ஆனால் வைகோ ஒரு ராசியில்லாத ராஜாவாகவே பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் முடிவை வைகோ எடுத்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், கோவில்பட்டி தொகுதியில் நாடார் ஜாதியினரை தவிர்த்து நாயக்கர் உள்ளிட்ட பல ஜாதி பிரிவினரும் கணிசமாக வசிக்கிறார்கள். கட்சி, அரசியலை தாண்டி ஜாதி பலமும் வைகோவுக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்   தொண்டர்கள்.

 கொம்யூனிஸ்ட்களின் கோட்டையான கோவில்பட்டியில் வைகோ வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து ஏழு முறை கொம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கோவில்பட்டியை விட்டுக்கொடுக்க கொம்யூனிஸ்ட்கள் முதலில் விரும்பவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவுக்கு பாதுகாப்பான தொகுதி வேண்டும் என்பதால் கோவில்பட்டியை கொம்யூனிஸ்ட்கள் விட்டுக்கொடுத்தனர்.

வைகோவின் வெற்றி மிக இலகுவானதாக இருக்கப்போவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வைகோவை  வீழ்த்துவதற்கு தனித்தனியாக வியூகம் அமைக்க உள்ளன. வைகொவுன் தோல்வி மக்கள் நலக் கூட்டணிக்கு பலத்த அடியாக இருக்கும் என்பதனால் வைகோவுக்கு எதிரான பிரசாரம் கோவில்பட்டியில் அனல் பறக்கும் என்பது உறுதியானது. வைகோவின் தோல்வி மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியாகக் கருதப்படும் என்பதனால் கூட்டணித தலைவர்கள் அனைவரும் வைகோவின் வெற்றிக்காக கோவில்பட்டியில் முகாமிடுவர்கள்.
 தமிழ்த்தந்தி
 25/04/16


No comments: