Saturday, February 6, 2016

தமிழக அரசியல் களத்தில் ரஜினியும் விஜயும்

மத்திய அரசு வழங்கும் விருதுகள் அவ்வப்போது சில அரசியல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. திறமையின் அடிப்படையில் விருது வழங்காது தமக்கு விருப்பமானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் போது அவ்விருதுகள் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.பத்மபூஷன்விருதுக்கு   ரஜினிதேர்வுசெய்யப்பட்டது அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.  தமிழக அரசியலில் கால் பதிக்க முயலும் பாரதீய ஜனதா ரஜினியை இழுக்கும்  முயற்சியில் தோல்வியடைந்தது. தமிழகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினிக்கு விருது வழங்குவதை அரசியல் கண்ணாடியால் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழக அரசியல் நாடகம் மூலம் வளர்ந்தது. பின்னர் திரைப்படம் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பரிணமித்தது. அண்ணாத்துரை,கருணாநிதி,,எம்.ஆர்.ராதா,சிவாஜி,எம்.ஜி.ஆர்,எஸ்,எஸ்,ஆர் ஜெயலலிதா போறவர்கள் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்.  புதிய நடிகர்களும் அரசியலில் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்கு  சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரஜினி,விஜய் ஆகியோரை தமது கட்சியில் சேர்ப்பதற்கு பாரதீய ஜனதா பலமுறை முயன்றது. இந்தியப்பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இவர்கள் இருவரையும் சந்தித்தார். அப்போது அவர்கள் பாரதீய  ஜனதாவில் சேரப்போவதாக செய்தி பரவியது. அரசியல் எனற மாயையில் வீழ்வதற்கு ரஜினியும் விஜயும் தயாராகவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் ரஜினியும்,விஜயும்  அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டவர்கள். தம்மைப் பாதுகாப்பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அவர்கள் இணைவர்கள் என்ற எதிர்பார்ப்பை இருவரும் முறியடித்தார்கள்

தமிழக அரசியல் சூடாகும் போது ரஜினியும் விஜயும் அரசியலுக்கு இழுக்கப்படுவர்கள். இம்முறையும் இவர்களின் பெயர் அரசியல் களத்தில் விவாதமாகி உள்ளது.  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்ற ரஜினி பத்மவிபூஷன் விருதுக்குத் தகுதியானவர்தான். என்றாலும் தமிழகத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் ரசிகர்களை குறிவைத்து இவ்விருது வழங்கப்பட்டிருக்கலாம் எனற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விருதில் அரசியல் சாயம் இருப்பதை மறுக்க முடியாது ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள் இவ்விருது குறித்து பெரிதாக வாய்திறக்கவில்லை.  இதனை அரசியலாக்கினால் தமது அரசியல் வாழ்க்கை படுத்துவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. 


ரஜினிக்கு வழங்கப்பட்ட விருதில் அரசியல் இல்லை என பாரதீய ஜனதாக் கட்சித்  தலைவர்கள் கூறுகின்றனர். குதிருக்குள் அப்பன் இல்லையென்பதை இது நினைவூட்டுகிறது     தமிழக அரசியலில் ரஜினியின் பங்களிப்பு மறை முகமாகவும் நேரடியாகவும் இருக்கிறது.  ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற வதந்தி அவ்வப்போது கால் கை முளைத்து வெளிவரும்.  திரைப்படங்களில் அதிரடியான அரசியல் வசனம் பேசும் ரஜினி அரசியலில் கால் வைக்கத் தயாராக இல்லை.  தனக்குப் பாதிப்பு ஏற்படும் போது  சில கருத்துக்களை கூறி தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்துகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பம்பாய்  படத்துக்கு எதிர்ப்ப்பு எழுந்தது மணிரத்தினம் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டபோது தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் ஆரம்பமாகி விட்டது என்றார். சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட பாராட்டு விழாவில் ஜெயலலிதாவின்  முன்னாலேயே சிவாஜிக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று  அவரை எரிச்சலூட்டினர்   1996 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால் தமிழகத்தை  ஆண்டவனாலும்  காப்பாற்ற முடியாது என்றார். கருணாநிதி மூப்பனார் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.அத்தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைப்பறி கொடுத்தார்.  1998 இந்திய   நாடாளுமன்றத் தேர்தலிலும் கருணாநிதியையும் மூப்பனரையுய்ம் ஆதரித்து குரல் கொடுத்தார். கோவைக்கு அத்வானி சென்றபோது குண்டு வெடித்து பலர் பலியானார்கள். அத்தேர்தல் கருணாநிதியிடம் இருந்த ஆட்சியைப் பறித்து ஜெயலலிதாவிடம் கொடுத்தது.


2001  ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும்  1999 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலிலும் ரஜினி குரல் கொடுக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாபா படப்பிரச்சினையால் ராமதாஸை எதிர்த்தார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள ராமதாஸை தோற்கடிப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பாரதீயா ஜனதாவையும் சில தொகுதிகளில் ஆதரித்தார். அவரது குரல் எடுபடவில்லை.


மீண்டும் ரஜினியின் குரலுக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதத்திலிருந்து பழ.கருப்பையா தூக்கி எறியப்பட்டுள்ளார். துக்களக் ஆண்டுவிழாவில்  ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சித்ததனால் அவரின் பதவியை ஜெயலலிதா பிடுங்கினர். பழ.கருப்பையாவுக்கு அதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ரஜினியும் அவருடன் தொடர்பு கொண்டதால் அரசியல்  சாயம் பூசப்பட்டுள்ளது.  பிரபல படத்தயாரிப்பாளரான   பழ. கருப்பையாவுக்கு திரை உலக நண்பர்கள் பலர் உள்ளனர், ரஜினியும் அப்படிப்பட்ட நண்பர்தான். படப்பிடிப்புக்காக ரஜினி மலேஷியாவுக்குச் சென்றுள்ளார். மலேஷியாவிலிருந்து திரும்பியது சந்திக்கப்போவதாக பழ.கருப்பையவிடம் கூறியுள்ளார் 


விஜயகாந்துக்காக காத்திருந்த கருணாநிதி விஜயின் பக்கம் சாய்வதாக செய்தி வெளியாகி உள்ளது. துப்பாக்கி,கத்தி,புலி ஆகிய படங்கள் வெளியாவது தாமதமாகியத்தில் அரசியல் பழிவாங்கல் இருப்பதாக சந்தேகமுள்ளது.  படப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஜெயலலிதாவைச்சந்திக்க விஜயும் தகப்பனும் முயற்சி செய்தார்கள்.  நீண்ட தாமதத்தின் பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச்சந்தித்தர். அதன் பின்னரும் விஜயின் படங்களுக்கு இருந்த சிக்கல்கள்  தீரவில்லை.

தமிழத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் அவர்களது வாக்கு வங்கியை குறிவைத்து திராவிட முன்னேற்றக் கழகம் காய் நகர்த்துகிறது.  விஜயின் தகப்பன் சந்திரசேகருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருப்பதாக  தெரிகிறது. விஜயகாந்துக்கு அதிக தொகுதிகளை அள்ளிக்கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகவில்லை. விஜயை  வளைத்துப் போட்டால் விஜயகாந்த்துக்கு கொடுக்கும் தொகுதிகள் மிஞ்சும் என திராவிட முன்னேற்றக் கழகம் கணக்குப் போடுகிறது. ரஜினியும் விஜயும் சிக்குவார்களா என்பது தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தெரிந்துவிடும்.

ரமணி
தமிழ்த்தந்தி
07/02/16

No comments: