Saturday, February 27, 2016

பதவி இழந்த விஜயகாந்த் பழிவாங்கிய ஜெயலலிதா

தமிழக அரசியலில் நிரந்தர இடம் கிடைக்காது அல்லாடிக்கொண்டிருந்த விஜயகாந்தை  எதிர்க்கட்சித் தலைவராக்கி அழகு பார்த்த ஜெயலலிதா அவரிடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறித்து  செல்லாக்காசாக்கினர். தமிழக சட்டசபை வரலாற்றில் ஆளும் கட்சியின் அனுசரணையுடன் விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவரானார். எதிர்க்கட்சிக்குரிய சலுகையை ஆளும்  கட்சி தனதாக்கியது. எதிர்க்கட்சி இல்லாத அரசு என்ற பெருமையை ஜெயலலிதாவின் அரசு பெற்றுள்ளது.  ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபோது  தனக்குத் தேவையான விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக்கினர். ஐந்து வருட ஆட்சி முடியும் காலத்தில் விஜயகாந்திடம்  இருந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பறித்தார்.நடைபெறப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்து இல்லாது வெறும் உறுப்பினர் என்ற ரீதியில் தான் விஜயகாந்த் போட்டியிடுவார்.

யாருடனும் கூட்டணி இல்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்த  விஜயகாந்தை அவரது அரசியல் வழிகாட்டியான பண்டிருட்டி ராமச்சந்திரனும் இடதுசாரிகளும் சேர்ந்து வலுக்கட்டாயமாக ஜெயலலிதாவின் பக்கம் தள்ளினார்கள். வேண்டா வெறுப்பாக ஜெயலலிதாவுடன் இணைந்த விஜயகாந்த் அதிர்ஷ்ட வசத்தால் எதிர்க் கட்சித் தலைவரானார்.  ஜெயலலிதா அள்ளிக் 41 தொகுதிகளில்  போட்டியிட்ட விஜயகாந்தின் கட்சி  29  தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழக சட்ட சபையில் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவரான விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.  விஜயகாந்தின் போக்கு பிடிக்காததனால் பண்டிருட்டி ராமச்சந்திரன் ரஜினாமாச்   செய்தார். விஜயகாந்தின்  கட்சியைச்சேர்ந்த  எட்டு உறுப்பினர்கள்    அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் பக்கம் சாய்ந்தனர். அவர்கள் தனியாக இயங்க சபாநாயகர் அனுமதித்தார்.    இது வரை காலமும் தனியாக இயங்கிய அவர்கள் கடந்த வாரம் தமது பதவியை இரஜினமாச்செய்தனர். அதனால் விஜயகாந்தின் எதிர்க் கட்சித்தலைவர் பதவி பறிக்கப்பட்டது.


தமிழக சட்டசபையில் 24  உறுப்பினர்கள் உள்ள கட்சியின்  தலைவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்பது விதி. அந்தத் தலைவிதியால்   தமிழக சட்டசபையில் விஜயகாந்தின்  பலம் 20 ஆகக் குறைந்ததனால் அவர் எதிக் கட்சித் தலைவர் பதவியை இழந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவளித்த விஜயகாந்தின் கட்சியைச்சேர்ந்தசுந்தரராஜன்,பாண்டியராஜன்,தமிழழகன்,சாந்தி,சுரேஷ்குமார்,மைக்கல் ராயப்பன்,அருண் சுப்பிரமணியன்,அருண் பாண்டியன் ஆகியோர்  தமது பதவியை   இராஜினாமாச் செய்தனர்.  இவர்களைப் போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கலைஅரசு,புதிய தமிழக கட்சியின் உறுப்பினர்  ராமசாமி ஆகியோரும் தமது பதவியை இராஜினாமாச் செய்தனர்.


ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் இயங்கிய இந்த பத்து உறுப்பினர்களும் சட்ட சபை கலைக்கப்படும் காலம்  நெருங்குகையில் பதவியில் இருந்து விலகினர்.  ஜெயலலிதாவின் கட்டளைக்கு இணங்க தமது பதவியைத் துறந்தனர். இவர்கள்  வேறு கட்சிகளுக்குப் போகும் சாத்தியம் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. கருணாநிதியை பதவியில் இருந்து தூக்கி எறிவதற்காக ஜெயலலிதாவுடன் விஜயகாந்த்  இணைந்தார்.  அவர்கள் இருவரும் எதிர் பார்த்தது நடந்தது. தமிழக ஆட்சியைப் பிடிக்கும் போது கருணாநிதியை பதவியில் இருந்து இறக்கிய ஜெயலலிதா ஐந்து வருட ஆட்சிக் காலம்  முடியும் போது  விஜயகாந்தை வெறும் காந்த் ஆக்கி ஒரு கல்லில் இரண்டு  மாங்காய்களை வீழத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாநாட்டில் நான் கிங்காக இருக்கப்போகிறேன்  என விஜயகாந்த் கர்ச்சித்தார். அவரது கர்ஜனை ஒலி அடங்க முன்னர் ஜெயலலிதா அவரை அரசியல் ரீதியாக அடக்கி விட்டார். எதிர்க் கட்சித் தலைவர் என்ற பெருமையுடன் காஞ்சிபுரம் மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த் மாநாடு முடியும் போது எதிக் கட்சித் தலைவர் என்ற முடியைப் பறிகொடுத்தார். காஞ்சிபுரம் மாநாட்டில் முக்கியமான முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என அவரது தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கையில் எதிர்பாரத விதமாக மிக முக்கியமான  முடிவை ஜெயலலிதா எடுத்தார்.

அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் தலைவர்களை கிங்க்மேக்கர் என்பார்கள். கிங்மேக்கர் என்றால்  கர்ம வீரர் காமராஜர்  என்றே அனைவரும் உச்சரிப்பார்கள் விஜயகாந்த் ஒருபடி மேலேபோய் கிங் ஆக ஆசைப்படுகிறார். அவரின் வாக்கு வங்கியை நம்பி அவரை கிங் என சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.  தனக்கு வர வேண்டிய பதவியைத் துறந்து நாட்டையும் கட்சியையும் நேசித்து கிங்மேக்கராக  மிளிர்கிறார் காமராஜர். மனைவிக்கும் மச்சானுக்கும் பதவி சுகம் வேண்டி கிங்காக விரும்புகிறார் விஜயகாந்த்.

காஞ்சிபுரம் மாநாடு ஜெயலலிதாவை திட்டித் தீர்க்கும்  மாநாடாக முடிவடைந்தது. பிரேமலதாவின் அரசியல் அநாகரிகப் பேச்சு முகம் சுளிக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவருக்கு பிள்ளை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பிரேமலதாவின் பேச்சை எவரும் ரசிக்கவில்லை.  இது போன்ற மாநாடுகளில் முக்கிய முடிவுகைளை கட்சித் தலைவர்கள்  வெளியிடுவர்கள்  தனது முடிவை கடைசி காலம்வரை இழுத்தடிக்கும் விஜயகாந்த் வழமை போல உறுதியான முடிவை வெளியிடவில்லை.
 திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதா,மக்கள் நலக் கூட்டணி  ஆகியன இன்னமும் விஜயகாந்தின்  வருகைக்காக கந்திருக்கின்றன. பாரதீய ஜனதாவும்,மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்துக்கு  முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளன. தமிழகத்தில் கால்பதிக்க வலுவான கொழுகொம்பைத் தேடுகிறது பாரதீய ஜனதா முதல்வர் பதவி ஒரு பிரச்சினை அல்ல என்பதே பாரதீய ஜனதாவின் கோட்பாடு.  ஆனால் இது வெற்றிக் கூட்டணியா  அல்லது வெற்றுக் கூட்டணியா என்பது தெரியாது தடுமாறுகிறார் விஜயகாந்த்.

விஜயகாந்தை முதல்வராக்குவதில் பிரச்சினை இல்லை என்கிறது மக்கள் நலக் கூட்டணி. பெரிய  கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதற்கு எத்தனை நாட்கள் தான் தோள் கொடுப்பது. அட்சியில் பங்கு வேண்டும் என்று கோஷமிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறிய திருமாவளவன் ஆட்சியில் பங்கு என்பதை தப்பித் தவறியும் உச்சரிக்கவில்லை. விஜயகாந்த் வந்தால் போதும்    என்பதே அவரது நிலைப்பாடு. இன்றைய அரசியல் கள நிலவரத்தின்படி  தேர்தலில் வெற்றி தோல்வி முக்கியமில்லை. விஜயகாந்த் தம்முடன் இணைந்தாலே போதும் அதுவே தமக்கு பெரிய வெற்றி என கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர்.
விஜயகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. 2006 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இரண்டு சட்ட சபைத் தேர்தல்களிலும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. தனித்துப் போட்டியிட்டு தனது  வாக்கு வங்கியை நிரூபித்துள்ளார். 2011  ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டார். 2014 ஆம் ஆண்டு பாரதீய  ஜனதாக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால் முதல்வர் பதவி கிடைக்காது. ஆகையால் விஜயகாந்தின் முதல் தெரிவு திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்காது. பாரதீய ஜனதாவும் மக்கள் நலக்  கூட்டணியும் விஜயகாந்தை கிங் ஆக மாற்றுவதற்கு தயாராக உள்ளன. அவர் கிங்  ஆகுவார அல்லது கீழே விழுவரா என்பது தேர்தலின் பின்னர் தெரிந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
28/02/16 

No comments: