Thursday, February 11, 2016

உயிருடன் விளையாடும் விபத்துகள்


வீட்டைவிட்டு வெளியே  சென்றால் உயிருடன் திரும்பி வருவோமா  என்ற சந்தேகம் உள்ளது.   எப்படித்தான் அவதானமாக நடமாடினாலும்  விபத்து என்ற கோர அசுரன் உயிரைக் காவு கொள்கின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் எப்போதாவது ஒரு நாள் விபத்து நடைபெற்றது. இன்று விபத்துக்கள் இல்லாத நாளே கிடையாது.

வாகனங்கள் அதிகரித்தது விபத்துக்கு ஒரு  காரணம் என்று கூறப்படுகிறது. வாகனப் பெருக்கம் ஒரு காரணமாக இருந்தாலும்  வாகனங்களைச் செலுத்துபவர்களின் அனுபவமின்மையும் பிரதான காரணம். கொஞ்சம் பின்னோக்கிய காலத்தில் உயர் தரம் படிக்கும் மாணவனுக்குத்தான் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்கள்.  இன்று நிலைமை மாறிவிட்டது. மோட்டார் சைக்கிள் ஒரு  கெளரவப் பொருளாகி விட்டது.யாழ்ப்பாணத்திலே  முன்னர்  ஒரு வீட்டிலில் இரண்டு மூன்று சைக்கிள்கள்   இருந்தன. இன்று அந்த இடத்தை மோட்டர் சைக்கிள்கள் பிடித்துவிட்டன. உயிரை கவு கொள்வதில் மோட்டர் சைக்கிள் விபத்து  முன்னிலையில் உள்ளது.

திருமணம்,பிறந்த நாள்,விருந்துபசாரம் போன்ற விசேஷமான நாட்களில் அவசர தேவைக்காக மோட்டர் சைக்கிளில் அதி வேகமாகச்செல்லும் இளைஞர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.  கடந்த வாரம் யாழ்ப்பணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்  வீதியை ஆக்கிரமித்து சாகசம் கட்டியதி  பாரிய விபத்து நடைபெற்றது.பல்கலைக் கழக மாணவன் மோட்டர் சைக்கிளில் விபத்தில் சிக்கியதால் பரீட்சை எழுத முடியாது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.  இது போன்ற விபத்துக்களை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.விபத்தி லிருந்து நாமும் மற்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டுன் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால் இது போன்ற  விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை. 

வீதி ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்கப்படாமை  அதிக வேகம் கார்பெட் வீதிகள்  என்பனவும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கான காரணிகள். மஞ்சள் கோட்டிலே வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமான  சாரதிகளுக்கு இல்லை. விதியைக் கடக்க நிற்பவர்களை அற்ப பதர்கள் போல பார்த்துக் கொண்டு செல்வார்கள். தமக்காக மட்டும் அமைக்கப்பட்ட பிரதான வீதி என்ற நினைப்பு சில சாரதிகளிடம் உள்ளது.  முன்னுக்குச்செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் எனற அவா சில சமயம் விபத்தை உண்டாக்கி விடுகிறது.

இ.போ.சவுக்கும் தனியார் பஸ்ஸுக்கும்  இடையேயான போட்டியால் அநியாயமாக பல உயிர்கள் பறிக்கப்படுகின்றன. கடந்த வாரம் பலாலி வீதியில் நடைபெற்ற கோர விபத்து இதற்கு சாட்சி. வாகனத்தை  முந்திச்செல்வது.   நடு வீதியில் பயணிகளை இறக்குவது ஏற்றுவது என்பான பயணிகளுக்கு  அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பின்னால் வரும் வாகனத்தை முந்த விடாது நடு வீதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனத்தைச்செலுத்தும் சாரதிகள் பின்னர் அதுபற்றி பெருமையாகப் பேசுவார்கள். இ.போ.சவுக்கும் தனியார் பஸ்ஸுக்கும் இடையேயான  போட்டி சில சமயம் கைகலப்பாகவும் மாறிவிடுவதுண்டு.

மது அருந்தி விட்டு வாகனத்தைச் செலுத்துவது  பாரிய விளைவைத் தோற்றுவிக்கும் என்பதை அறிந்து கொண்டும் மது அருந்திய பின வாகனத்தைச் செலுத்துகிறார்கள்.   விசேஷமான நாட்களின் மது அருந்துவது கட்டாயம் என்ற மனோநிலை  சிலரிடம் ஏற்பட்டுள்ளது.  மது அருந்திய பின் வாகனம் செலுத்தக் கூடாது, ஹெல்மட் இல்லாமல் மோட்டர் சைக்கிள் செலுத்தக்  கூடாது என்பனவற்றைத் தெரிந்து கொண்டும் அப்படியான தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்.

 ரயிலை முந்திச்செல்ல முயலும் புத்திசாலிகளால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்பற்ற  புகையிரதக் கடவையில் விபத்து புகையிரதக் கடவைக்கு பாதுகாப்பு போட வேண்டும் எனக்கோரி  மக்கள் போராட்டம் என்ற செய்தி பத்திரிகைகளில் முதலிடம் பிடிக்கின்றன. அதேவேளை பாதுகாப்பான கடவையில் புகையிரதத்தை முந்திச்செல்ல முயன்று நடைபெறும் விபத்துக்களும் இடம் பிடிக்கின்றன. புகையிரதக்  கடவையின் இரண்டு பக்கங்களிலும் துலாவை இறக்கிவிட்டு பீப்  பீப்  என்ற எச்சரிக்கை ஒலி கேட்கும் போது சில அவசரக் குடுக்கைகள்   வீதியைக் கடக்க்கிறார்கள். விதி வலியதாகும் போது அவர்களின் வாழ்வு  அங்கேயே முடிந்து விடுகிறது.

திருமணத்துக்காக வெளிநாட்டில் இருந்து வந்த மணமகன்  பலி என்ற செய்தி பலரையும் கலங்க வைக்கும் செய்தி என்பதில் சந்தேகமில்லை.அப்படியான சந்தர்ப்பங்களில் வாகனத்தைச் செலுத்துபவர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.இரவு பகல் நித்திரை இல்லாது வாகனம் செலுத்துவதும் விபத்துக்குக் காரணமாகிறது. சில நிறுவனங்கள் சாரதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து செலவை மிச்சம் பிடிக்கிறார்கள். அப்போது மேலதிக வேலையில் கிடைக்கும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படுவபர்களால் விபத்தைத் தவிர்க்க முடிவதில்லை.

விபத்து என்பது நம்மையும் மீறி  நடைபெறும் ஒரு சம்பவம். ஆனால், இன்றைய அதிகமான விபத்துகள் அலட்சியத்தால் நடைபெறுகின்றன, வாகனத்தைச் செலுத்தும்போது எனது குடும்பத்தை நான் காப்பற்ற  வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் விபத்தைத் தவிர்க்கலாம்.
ஊர்மிளா
 சுடர் ஒளி
பெப்ரவரி 10,பெப்ரவரி 16/16










No comments: