Sunday, January 31, 2016

கலைகிறது வைகோவின் கனவு புதிய கூட்டணிக்குத் தயாராகும் தலைவர்கள்

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   ஆகியவற்றை  அரசியல் அரங்கிலிருந்து  அகற்றுவதற்காக  வைகோவின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில்  பிளவு ஏற்பட்டுள்ளது. அட்டகாசமாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி பற்றிய நம்பிக்கை அதன் தலைவர்களுக்கு மிக அதிகமாக இருந்தது. முதலிடத்துக்கு செல்லப்போகும் சக்தி என தலைவர்கள் கனவுகண்டனர். விஜயகாந்த்,வாசன் ஆகியோரையும் தமது கூட்டனிக்குள் கொண்டுவர கடும் முயற்சி செய்தனர். பிடிகொடாமல் நழுவிய விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் பாரதீய ஜனதாக் கட்சியுடனும் பேரம் பேசுகிறார். வாசனின் அதரவாளர்கள் மக்கள் நலக் கூட்டணியை விரும்பவில்லை.
ஆறு  கட்சிகளுடன் ஆரம்பமான மக்கள் நலக் கூட்டணி நான்கு கட்சிகளாகச்சுருங்கியது.. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச்சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி என்பன இணைந்து தேர்தலைச்சந்திக்க தயாராகின.

.  தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தனித் தனிக் கட்சிகளாக நடத்தும்போது அதன் வெளிப்பாடு பலமானதாக இருக்கவில்லை. பல கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தியபோது அது மக்களின் கவனத்தை திசைதிருப்பியது.  இதன் வெற்றியும் இதனை மக்கள் பார்த்த விதமும் கூட்டனித் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தைக்  கொடுத்தது.  அந்த உற்சாகம் தந்த போதையில் அரசியல் கூட்டணி உதயமானது.

மக்கள் நலக் கூட்டனியால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தோற்கடிக்க முடியாது என்பது வெளிப்படையானது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகலனைத்துன் இணைந்தாலும் இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை நெருங்க முடியாது. அக்கட்சிகளின்  விசுவாசம் மிக்க தொண்டர் பலத்துக்கு முன்னால் ஏனைய  கட்சித் தொண்டர்களால் நின்றுபிடிக்க முடியாது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பின்னால் உள்ள தலைவர்கள் மிகப்பலம் வாய்ந்தவர்கள். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள  தலைவர்களின் செல்வாக்கு அதல  பாதாளத்தில் உள்ளது.  கூட்டணி சேர்ந்தும் தேர்தலில் வெற்றி பெறாத தலைவர் என்ற அவப்பெயர் இவர்களுக்கு உள்ளது.

மக்கள் நலக்  கூட்டணியில் இருந்து கொம்யூனிஸ்ட் கட்சி  வெளியேறத் தயாராகி விட்டது. இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி மிக்க தலைவரான தா.பாண்டியன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை உடையவர் இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.
  மக்களின் குறைகளை வெளிப்படுத்தவும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நல இயக்கம் தான் மக்கள் நலக் கூட்டணியானது  இதனை அரசியல் கட்சியக்கையத்தில் பாண்டியனுக்கு உடன்பாடில்லை. வெற்றிவாய்ப்புள்ள பலமான கட்சியுடன் சேரவேண்டும் என்பதே பாண்டியனின் விருப்பம். மக்கள் நலக்  கூட்டணியில்  கொம்யூனிஸ்ட் கட்சி   இருந்தாலும் அதன் பார்வை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கியே இருந்தது. கருணாநிதி மீதான உரிமை  மீறல் பிரச்சினையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபையல் கொண்டுவந்தபோது    மாக்சிஸ்ட் கட்சி எதிர்த்தது.. கொம்யூனிஸ்ட் கட்சி  வாய்மூடி  மெளனம் காத்தது. 

 இடதுசாரித்தலைவர்  நல்லகண்ணுவை  முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என இடது சாரித்தலைவர்கள்  விரும்புகின்றனர். தேர்தலின் பின்னர் முதல்வர்  யாரென முடிவு செய்யலாம் என  வைகோ  முட்டுக்கட்டை போட்டுள்ளார். இதனை இடதுசாரித் தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டனிக்  கட்சிகளுடன் இணைந்து தெர்தளைச்சந்திக்கப் போவதாக ஜெயலலிதா சூழுரைத்துள்ளார். ஜெயலலிதாவின்  மீது விசுவாசம் உள்ள  கொம்யூனிஸ்ட் கட்சி   மெதுவாக நகரத்தொடங்கி விட்டது.
மக்கள் நலக் கூட்டணியின் அழைப்பை ஜி.கே.வாசன் நிராகரித்து விட்டார். வாசனின் அலுவலகத்துக்குச்சென்ர வைகோ தலைமையிலான தலைவர்கள் தம்முடன் சேருமாறு அவரை வருந்தி அழைத்தனர். கூட்டணி குறித்து தனது கட்சியில் உள்ளவர்களுடன் வாசன் கலந்துரையாடியபோது  மக்கள் நலக் கூட்டனிக்குச்சார்பாக்க யாரும் கருத்துக் கூறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்றே அவருக்குஆலோசனை கூறப்பட்டது.

ஒரே   நேரத்தில் எல்லாக்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்த்  ஏமாற்றி விட்டார். நம்பிக்கையுடன் இருந்த கொம்யூனிஸ்ட் கட்சி மதில் மேல்  பூனையாக பதுங்கி இருக்கிறது. கொஞ்சம் நம்பிக்கையளித்த வாசனும் கைவிரித்து விட்டார்.  அமைதியாக இருக்கும் திருமாவளவன் இறுதிவரைஇருப்பாரா  அல்லது  திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கக்ம் சாய்வாரா எனத்தெரியவில்லை.  எஞ்சி இருக்கும் மாக்சிஸ்ட் கட்சியும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுமோ  என வைகோ அச்சப்படுகிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளவர்கள் வெளியேறுவதால் வைகோவின் கூடாரம் காலியாகிறது. கட்சியில் உள்ளவர்களாலும் கூட்டணிக்  கட்சிகளாலும் வைகோ நிம்மதி இன்றித்தவிக்கிறார்.

  தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குகையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச்சேர்ந்த ஏழு பேர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைத்துள்ளனர்.  சமத்துவ மக்கள் கட்சியில்  சரத்த்குமாரையும்  அவரது மனைவி ராதிகாவையும் தான் மக்கள் அறிவார்கள். சமத்துவ மக்கள்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் சரத்குமார் மட்டும் தான் வெற்றி பெறார்.  கடந்த தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது. அடுத்த தேர்தலும் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் சரத்குமாருக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பொதுச்செயலாளர் கரு நாகராஜ், தலைமை நிர்வாகச்செயலாளர் ஜஸ் கவுஸ் தியாகு உள்ளிட்ட ஏழு பேர்  கட்சியைவிட்டு வெளியேறி விட்டனர். கட்சியின் செயற்பாட்டை மீறியதற்காக டாக்டர்  ஜெமீலாவையும் இன்னும் சிலரையும் சரத்குமார் கட்சியை விட்டு வெளியேற்றினார். நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் சரத்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

ரமணி
தமிழ்த்தந்தி

31/01/16

No comments: