Tuesday, January 12, 2016

மீள்குடியேற்றம் வேகத்துடன் மேலெழுமா?..எதிர்பார்க்கலாமா?

யுத்தம் தந்த அவல வாழ்கையினால் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய வலிகாமம் வடக்கு கிழக்கு மக்களுக்கு புதிய ஆண்டு நிம்மதியைத்தந்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற சிலந்தி வலையில் இருந்த வலிகாமம் வடக்கு கிழக்கில் இருந்து  இராணுவம் வெளியேறி அந்தப் பகுதியின் சொந்த மக்கள் குடியேறும் காலம்  கனிந்துள்ளது. இராணுவத்தின் பிடியில் இருந்த 701.5 ஏக்கர் நிலம் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கில் ஆறு கிராம சேவகர் பிரிவில் உள்ள 486.5 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.வலிகாமம்  கிழக்கு பகுதியில் எஞ்சி இருந்த 233 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. வலிகாமம் கிழகில் வளலாய் வருடங்களின் 25 பின்னர் முழுவதும் விடுவிக்கப்பட்டது. உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த பளைவீமன்காமம் வடக்கு,தையிட்டிதெற்கு,பலாலி தெற்கு,பலாலி வடக்கு,பலாலி கிழக்கு ஆகிய இடங்களுக்கு  பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
  உயர் பாதுகாப்பு வலயம்  என்ற  போர்வையில்  விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியேற அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரி ஆறு மாதங்களில் வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்ததன் பிரகாரம் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி   செவ்வாய்க்கிழமை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பகுதிகள் பொதுமக்களின் பாவனைக்காக  விடுவிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாய நிலங்களே அதிகம். சொந்த இடத்தை  தேடிச்சென்ற மக்கள் திக்குத் தெரியாது நின்றனர். பிறந்து வளர்ந்த இடங்கள் எவற்றையும்  அடையாளம் தெரியாது தவித்தனர். தமது  காணிகளின் எல்லை எதுவெனத்தெரியாது திக்கு முக்காடினர்.  கட்டடங்கள் தரை மட்டமாக்கப்பட்டிருந்தன. இருந்த ஒருசில கட்டடங்களின் கூரை,கதவு,யன்னல்,என்பன பிடுங்கப்பட்டிருந்தன. படையினர் தங்கி இருந்த கட்டடங்கள்  பாதுகாக்கப்பட்டிருந்தன. மீள் குடியேற்றம் என்பது மிக இலகுவானதல்ல. அடிப்படை வசதிகள் எவையும் இல்லாது மீள் குடியேற்றம்  சாத்தியமில்லை.

இராணுவ முகாம்களை அண்டிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்திய அரசாங்கம்  அப்பகுதியிலிருந்த மக்களை அச்சுறுத்தி வெளியேற்றியது. இஅடம்பெயர்ந்தவ்ர்கள் என்ற பெயருடன் வெளியேறிய மக்கள் அகதி முகம்களிலும் நண்பர்களின் உறவினர்களின் விடுகளிலும் குடியேறினர்.  சொந்த   நாட்டிலேயே அகதி என்ற அவப்பெயருடன் வாழ்கின்றனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என நினைத்தனர். உயர் பாதுகாப்பு வலயங்கள்  அகற்றப்படமாட்டாது. இராணுவம் நிலைகொண்டுள்ள இடத்தில் இருந்து வெளியேறமாட்டாது என முன்னாள் ஜனாதிபதி கூறினார். இதனால் இடம் பெயர்ந்து வாழும் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள்  அதிர்ச்சியடைந்தன.
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரி சில உறுதி மொழிகளை வழங்கினார். அவற்றில் ஒருசிலவற்றை நிறைவேற்றினார். ஒருசில நிறைவேற்றப்படவில்லை. அரசியல்வாதிகளின் உறுதிமொழிகளில் அநேகமானவை நிரவேற்றப்படுவதில்லை. வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு ஆறு மாதங்களில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரி கூறியபோது,  காற்றில் விடப்படும் அரசியல் உறுதிமொழி என்ற  எண்ணமே மேலோங்கியது. ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் துரித செயற்பாடு ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு கடந்த வருட இறுதியில் விஜயம் செய்த  ஜனாதிபதி, ஒரு அகதி முகாமுக்குச்சென்று அங்குள்ள மக்களுடன் சகஜமாகப் பேசினார். ஒரு நாட்டின் தலைவா போலல்லாது மிக எளிமையாக மக்களுடன் உரையாடினார். முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த யாழ்ப்பாணத்துக்கு   விஜயம் செய்தபோது இருந்த இறுக்கம் கெடுபிடி எவையும் இருக்கவில்லை.இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் விடுபட முன்னர் வலிகாமம்  கிழக்கு வடக்கு பகுதியை விடுவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
படையினர் தமது பகுதியை மிகப்பலமாக்குகின்றனர். புதிதாக எல்லை  போட்டு  தமது பாவனைக்காக புதிய வீதிகளையும் அமைக்கின்றனர். தமக்குரிய வசதிகளின்  மூலம் தமது கட்டமைப்பை அவர்கள் மிக விரைவாகச்செய்து முடிப்பார்கள்.  படையினரால் அழித்தொழிக்கப்பட்ட‌ பொதுமக்களின் சொத்துக்களுக்கு எதுவித நஷ்ட  ஈடும் கொடுக்கப்படுவதில்லை.  மீள்குடியேறும் மக்கள்  காணிகளைச்சுத்தம்  செய்வதற்குரிய உபகரணங்களையும்  உணவுப்பொதிகளையும்  தற்காலிக  இருப்பிடங்களை அமைப்பதற்கும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு முன்வந்துள்ளது.
மீள் குடியேற்றம்  என்பது மிக இலகுவானதல்ல. மக்களின் அடிப்படை வசதிகள்  செய்து கொடுக்கப்பட வேண்டும். குடிநீர், போக்குவரத்து, வீதி என்பன மிக விரைவாக செய்து முடிக்கப்பட வேண்டும்.குடியேறும் மக்களின் வேலை வாய்ப்பு வசதிகள் கவனிக்கப்பட வேண்டும். விவசாய நிலங்கள் அதிகளவில் விடுவிக்கப்பட்டமையால் விவசாயம் செய்வதற்குரிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்பகுதொயோ உள்ள ஆலயங்கள் புனரமைக்கப்பட வேண்டும். பாடசாலைகள் இயங்க வேண்டும்.  இவை எல்லாவற்றையும் துரித கதியில் செய்தால்தான் மீள் குடியேற்றத்தின் அர்த்தம் உண்மையாகும்.
ஊர்மிளா.
சுடர் ஒளி
ஜனவரி 06/01/16

No comments: