Sunday, April 5, 2015

ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்கெட் !


ஜென்டில்மேன் கேம் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் சமீபகாலமாக நடைபெறும் விஷயங்கள் அதிர்ச்சியை தரும்விதத்தில்தான் உள்ளன.
கிரிக்கெட் வீரர்களும் இப்போதெல்லாம் ஜென்டிலமேன்களாக நடப்பதில்லை. களத்தில் வீரர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் இதற்கு உதாரணம் . வீரர்கள் எவ்வழியோ அவ்வழியே ரசிகர்களும் செல்கின்றனர். தனது நாடு வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல தனக்கு பிடிப்பு இல்லாத நாட்டு அணியும் ஒருபோதும் வெற்றியடையக்கூடாது என்ற வெறுப்புணர்வு தலை தூக்க ஆரம்பித்துள்ளது.. நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மீது, பல நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் வெறுப்புணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்தியதை காண முடிந்தது. 
பாகிஸ்தான்,தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்து.ஜிம்பாவ்வே ,வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்தன. தொடர்ந்து ஃபேஸ் புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்திய எதிர்ப்பையே பெரும்பாலும் காண முடிந்தது. பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் மட்டுமல்ல இலங்கை ரசிகர்களும் இந்திய எதிர்ப்பாளர்கள் வரிசையில் இணைந்ததுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இத்தனைக்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, இலங்கையுடன் ஆடவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆடி தோல்வியடைந்த காரணத்தினால் பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிராக திரும்பினர் என்று எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் இவர்களுடன்  இலங்கை ரசிகர்களும் சேர்ந்தது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா அவுட்டுக்கு 'நோபால்' கொடுத்த பாகிஸ்தான் நடுவர் அலிம் தாரையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை

இந்த பகையுணர்வின் வெளிப்பாடே ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றதை வெற்றி விழாவாக கொண்டாட வைத்துள்ளது.  தமது நாடு வெற்றி பெற்றதைப்போல் மகிழ்ந்தார்கள். அரை இறுதியுடன் இந்தியா வெளியேறியதும் தமக்கு ஆதரவு வழங்குமாறு நியூஸிலாந்து தலைவர் இந்திய ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இந்தியாவை எதிர்க்கும் ரசிகர்களுக்கு அது கோபத்தை உண்டாக்கியது. நியூஸிலாந்துக்கு எதிராக களமிறங்கினார்கள்.இந்திய ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நியூஸிலாந்து சம்பியனாகக்கூடது எனவும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எப்போதும் அரசியல் முரண்பாடு உள்ளது. அதோடு இப்போது வங்கதேசத்துக்கும்  இந்தியாவுக்குமிடையேயான  பகைமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் பகை இருந்தாலும், இந்தியா என்று வந்துவிட்டால் இரு நாடுகளும் கைகோர்த்து விடுகின்றன. 

இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையேயான போட்டி உலக யுத்தம் போன்றதுதான். ஆஷஷ் கோப்பையை இழந்தால் அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பத்திரிகைகளும் இரு நாட்டு வீரர்களையும் நார்நாராக கிழித்து விடுவார்கள்.

நியூஸிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பகைமை வருடங்கள் பல கடந்தும் மறையவில்லை.

பகையுணர்வின் மொத்த உருவமாக மாறிநிற்கும் கிரிக்கெட்டை இனிமேல் ஜென்டில்மேன் விளையாட்டு என்று எப்படி சொல்வேன்...?

-வர்மா

No comments: