Tuesday, January 27, 2015

2வது உலக கோப்பை: 1979-ல் மீண்டும் அசத்தியது லாயிட் அண்ட் கோ

  இங்கிலாந்தில் 2வது உலக கோப்பை தொடர். இந்த முறையும் 8 அணிகள் பங்கேற்றன. கிழக்கு ஆப்ரிக்காவுக்கு பதிலாக கனடாவை சேர்த்துக் கொண்டார்கள். முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் மோதிய இந்தியாவுக்கு சம்மட்டி அடி.டாசில் வென்ற லாயிட் இந்தியாவை பேட் செய்ய வைத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர் இணைந்து மிரட்டியதில், இந்திய பேட்ஸ்மேன்கள் பெட்டிப் பாம்பாய் சுருண்டனர். குண்டப்பா விஸ்வநாத் மட்டும் உறுதியுடன் போராடி 75 ரன் எடுத்தார். இந்தியா 53.1 ஓவரில் 190 ரன்னுக்கு ஆல் அவுட்.அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நிதானமாக விளையாடி 51.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து எளிதாக வென்றது. டெஸ்மாண்ட் ஹெயின்ஸ் 47 ரன் எடுத்து கபில்தேவ் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். கார்டன் கிரீனிட்ஜ் 106, விவியன் ரிச்சர்ட்ஸ் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர்.இந்திய அணிக்கு முதல் கோணல் முற்றிலும் கோணலாகவே அமைந்துவிட்டது. 

அடுத்து நியூசிலாந்துடன் நடந்த லீக் ஆட்டத்தில், இந்தியா 55.5 ஓவரில் 182 ரன்னுக்கு சுருண்டது. கவாஸ்கர் அதிகபட்சமாக 55, பிரிஜேஷ் பட்டேல் 38, கபில்தேவ் 25, காவ்ரி 20 ரன் எடுத்தனர். நியூசிலாந்து 57 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து வென்றது. ஜான் ரைட் 48, லான்ஸ் கேர்ன்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தனர். புரூஸ் எட்கர் 84, கிளென் டர்னர் 43 ரன் விளாசி வெற்றிக்கு கை கொடுத்தனர்.எல்லா அணிகளுமே டெஸ்ட் பாணியில் இருந்து விடுபட முடியாமல் செக்கு மாடுகளைப் போல சுற்றி வந்தன. ஓவருக்கு சராசரி ரன் குவிப்பு 3.2 என்ற அளவிலேயே இருந்தது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இலங்கையுடன் நடந்த போட்டியிலும் மண்ணைக் கவ்விய இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியுடன் வெற்றிகரமாக வெளியேறியது.டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை 60 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்தது.

வெட்டிமுனி 67, ராய் டயஸ் 50, துலீப் மெண்டிஸ் 64 ரன் விளாசினர். இந்தியா 54.1 ஓவரில் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெங்சர்க்கார் 36, கெயிக்வாட் 33, கவாஸ்கர் 26, விஸ்வநாத் 22 ரன் எடுத்து கவுரவமான தோல்விக்கு உதவினர். முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. 2வது இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 43 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. 294 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் மஜித் கான் (81 ரன்), ஜாகீர் அப்பாஸ் (93 ரன்) தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடி ஏமாற்றினர். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 23ம் தேதி இறுதிப் போட்டி. டாசில் வென்ற இங்கிலாந்து வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய வைத்தது. விவியன் ரிச்சர்ட்ஸ் & காலிஸ் கிங் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அமர்க்களமாக விளையாடி 139 ரன் சேர்த்தது. கிங் 86 ரன் (66 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விடைபெற்றனர் (3 பேர் டக் அவுட்). வெஸ்ட் இண்டீஸ் 60 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது.

சூயிங்கம் மென்றபடி அசால்ட்டாக விளையாடிய விவியன் ரிச்சர்ட்ஸ் 138 ரன் எடுத்து (157 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணிக்கு கேப்டன் மைக் பிரையர்லி & ஜெப்ரி பாய்காட் ஜோடி 129 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் 51 ஓவரில் 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.முதல் 4 வீரர்களான பிரியர்லி 64, பாய்காட் 57, டெரக் ரண்டால் 15, கிரகாம் கூச் 32 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (5 பேர் டக் அவுட்). வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜோயல் கார்னர் 5, கோலின் கிராப்ட் 3, ஹோல்டிங் 2 விக்கெட் வீழ்த்தினர். 92 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் உலக சாம்பியன் பட்டத்தையும் புருடென்ஷியல் கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டது. விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

* வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் 4 போட்டியில் 253 ரன் எடுத்து (அதிகம் 106*, சராசரி 84.33) முதலிடம் பிடித்தார்.
* விக்கெட் வேட்டையில் இங்கிலாந்தின் மைக் ஹெண்ட்ரிக் 5 போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தி (சிறப்பு: 4/15) முதலிடம் பிடித்தார்.
* வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் விளாசிய 138 ரன், தனிநபர் அதிகபட்சமாக அமைந்தது.
* ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 60 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர். கனடா அணி இங்கிலாந்துக்கு எதிராக 40.3 ஓவரில் 45 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது குறைந்தபட்ச ஸ்கோராகும்.
* சுனில் கவாஸ்கர் 3 போட்டியில் விளையாடி 89 ரன் எடுத்து 18வது இடம் பிடித்தார். விஸ்வநாத் 106 ரன்னுடன் 15வது இடம்.

No comments: