Friday, January 30, 2015

1996 இலங்கைக்கு வில்ஸ்கப்

6வது உலக கோப்பை தொடரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து நடத்தின. கென்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து உள்பட மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்த சுற்றின் முடிவில் கடைசி 4 இடங்களைப் பிடித்த அணிகள் வெளியேற்றப்பட்டு, மற்ற அணிகள் கால் இறுதியில் மோதின.1992 உலக கோப்பையிலேயே பீல்டிங் கட்டுப்பாடுகள் அறிமுகமாகியிருந்ததால், இம்முறை பல அணிகள் தொடக்கத்திலேயே அதிரடி வீரர்களை பிஞ்ச் ஹிட்டர்ஆக களமிறக்கி விரைவாக ரன் குவிக்கும் வியூகத்தை முயற்சித்தன. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி இந்த சோதனை முயற்சியை முற்றிலுமாக தவிர்த்துவிட்டது. மூன்றாவது நடுவர் முதல் முறையாக அறிமுகமானார்.இலங்கையில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கொழும்பு சென்று விளையாட மறுத்துவிட்டன. இதனால், அந்த 2 லீக் ஆட்டத்திலும் இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி முதலிடம் பிடித்தது. பி பிரிவில் தென் ஆப்ரிக்கா 5 லீக் ஆட்டங்களிலும் அபாரமாக வென்று ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கேரி கிறிஸ்டன் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக 188 ரன் விளாசி உலக சாதனை படைத்தார்.இந்திய அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சச்சின் அமர்க்களமாக விளையாடி ரன் குவித்தார். 


பெங்களூரில் நடந்த 2வது கால் இறுதியில் இந்தியா & பாகிஸ்தான் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. சித்து 93, சச்சின் 31, ஜடேஜா 45 ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் மட்டுமே எடுத்து 39 ரன் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. இந்த போட்டியில் இருந்து, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வாசிம் அக்ரம் தசைப்பிடிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்நாட்டு ரசிகர்கள் லாகூரில் உள்ள அவரது வீட்டின் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தினர்.இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா 111 ரன் விளாசி தென் ஆப்ரிக்காவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நியூசிலாந்தின் கிறிஸ் கேர்ன்ஸ் 130 ரன் அடித்து நொறுக்க, ஆஸ்திரேலியாவுக்கு கடினமான இலக்கு (287) நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொடரில் தனது 3வது சதத்தை (110) பதிவு செய்து பதிலடி கொடுத்த மார்க் வாஹ் ஆஸி. அணியை அரை இறுதிக்கு தகுதி பெற வைத்தார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதலாவது அரை இறுதி. ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா & இலங்கை அணிகள் மோதின. டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. 



தொடக்கத்தில் சரிவை சந்தித்த இலங்கைக்கு அரவிந்த டிசில்வா 66, மகானாமா 58, கேப்டன் ரணதுங்கா 35, ஹசன் திலகரத்னே 32, வாஸ் 23 ரன் விளாசி கை கொடுத்தனர். அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய இந்திய அணி, சச்சின் & மஞ்ரேக்கர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தபோது எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சச்சின் 65 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் அசாருதீன் டக் அவுட் ஆகி அணிவகுப்பை தொடங்கிவைத்தார். மஞ்ரேக்கர் 25 ரன் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.ஒரு கட்டத்தில், ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற நிலையில் இருந்த இந்தியா 34.1 ஓவரில் 120 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. வினோத் காம்ப்ளி 10, கும்ப்ளே (0) இருவரும் களத்தில் செய்வதறியாது திகைத்து நிற்க, இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தை கொஞ்சமும் எதிர்பார்க்காத கொல்கத்தா ரசிகர்கள் கொந்தளித்தார்கள். கேலரியில் தீ பற்றி எரிந்ததை அடுத்து, மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாததால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். 



மொகாலியில் நடந்த 2வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. 15 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, ஸ்டூவர்ட் லா 72, பெவன் 69, ஹீலி 31 ரன் சேர்க்க 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்னை எட்டியது.வெஸ்ட் இண்டீஸ் சேசிங்கில் சந்தர்பால் 80, லாரா 45, கேப்டன் ரிச்சர்ட்சன் ஆட்டமிழக்காமல் 49 ரன் எடுக்க, கடைசி 7 வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன் என்ற வலுவான நிலையில் இருந்து 202 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது (49.3 ஓவர்). லாகூரில் நடந்த பைனலில், ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. இலங்கை 46.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து வென்று வில்ஸ் கோப்பையை கைப்பற்றியது. குருசின்கா 65, டிசில்வா 107*, கேப்டன் ரணதுங்கா 47* ரன் விளாசினர். ஆட்ட நாயகன் விருதை அரவிந்த டிசில்வாவும், தொடர் நாயகன் விருதை ஜெயசூரியாவும் தட்டிச் சென்றனர்.




* இந்திய வீரர் சச்சின் 7 போட்டியில் 523 ரன் குவித்து (சதம் 2, சராசரி 87.16) முதலிடம் பிடித்தார். ஆஸி. வீரர் மார்க் வாஹ் 484 ரன், இலங்கையின் டிசில்வா 448 ரன்னுடன் அடுத்த இடங்களைப் பிடித்தனர்.
* விக்கெட் வேட்டையில் இந்தியாவின் அனில் கும்ப்ளே 7 போட்டியில் 15 விக்கெட் வீழ்த்தி (சிறப்பு: 3/28) முதலிடம் பிடித்தார். 
* ஆஸ்திரேலியாவின் மார்க் வாஹ் தொடர்ச்சியாக 2 சதம் உள்பட மொத்தம் 3 சதம் விளாசி (130, 126, 110) சாதனை படைத்தார்.
* தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன், ராவல்பிண்டியில் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 188 ரன் விளாசியது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
* இந்த தொடரில் மொத்தம் 16 சதங்கள் அடிக்கப்பட்டன.
* கண்டியில் கென்யாவுக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன் குவித்தது அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

No comments: