Thursday, January 29, 2015

1992 இம்ரான் தலைமையில் அசத்தியது பாகிஸ்தான்

 ஐந்தாவது உலக கோப்பை போட்டித் தொடரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தின. பென்சன் - ஹெட்ஜஸ் உலக கோப்பையாக நடந்த  இந்த தொடரில் பல புதுமைகள் அரங்கேறின. முதல் முறையாக வண்ண சீருடை, கறுப்பு சைட் ஸ்கிரீன், 2 வெள்ளை பந்து, மின்னொளி  வெளிச்சத்தில் பகல்/இரவு ஆட்டம், முதல் 15 ஓவர்களுக்கு உள்வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டும், அதன் பிறகு உள் வட்டத்துக்குள்  குறைந்தபட்சம் 4 பீல்டர்கள் என்று பீல்டிங் கட்டுப்பாடுகள், ஸ்டம்புகளில் மைக்ரோபோன்ஞ் என்று அதிரடி மாற்றங்கள். மழையால் பாதிக்கப்படும்  போட்டிகளில் இலக்கை நிர்ணயிப்பதற்காக அறிமுகமான புதிய விதிமுறை கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டது.

நிறவெறி சர்ச்சை காரணமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தென் ஆப்ரிக்க அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட அழைப்பு  விடுக்கப்பட்டது. அறிமுக தொடரிலேயே அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி அசத்தியது. பீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி அதிக ரன்  குவிக்கும் முனைப்பில், அதிரடி ஆட்டக்காரரைபிஞ்ச் ஹிட்டர்ஆக முன்னதாகவே களமிறக்கும் வியூகத்தை பல அணிகள் முயற்சித்தனபாகிஸ்தானின் இம்ரான் கான், இங்கிலாந்தின் இயான் போத்தம் போன்ற தலைசிறந்த ஆல் ரவுண்டர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. மொத்தம் 9 அணிகள். ஒவ்வொரு அணியும் மற்ற 8 அணிகளுடன் ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதின. அசாருதீன் தலைமையில் களமிறங்கிய  இந்திய அணியில் சச்சின், காம்ப்ளி, அஜய் ஜடேஜா இடம் பெற்றனர். சச்சின் அப்போது 4வது, 5வது வீரராகக் களமிறங்கியதால் பெரிதாக கை  கொடுக்க முடியவில்லை.

முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்திய அணிக்கு இந்த தொடரில் அதிர்ஷ்டமில்லை என்றுதான்  சொல்ல வேண்டும். அடுத்து இலங்கையுடன் நடந்த ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுடன் மோதிய ஆட்டத்தில் நன்றாக  விளையாடிய கேப்டன் அசாருதீன் (93), மஞ்ரேக்கர் (47 ரன்) இருவரும் ரன் அவுட் ஆனார்கள். கடைசி 2 பந்தில் மனோஜ் பிரபாகரும், வெங்கடபதி  ராஜுவும் ரன் அவுட் ஆகித் தொலைக்க, 1 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க  அணிகளிடமும் தொடர்ந்து உதை வாங்கியதால் அரை இறுதி வாய்ப்பு பறிபோனது. 

பரம எதிரியான பாகிஸ்தானுடன் சிட்னியில் மோதிய ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்தில் வென்றது மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக  அமைந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 49 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. சச்சின் அதிகபட்சமாக  ஆட்டமிழக்காமல் 54 ரன் எடுத்தார். ஜடேஜா 46, அசார் 32, காம்ப்ளி 24, கபில் 35 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் 48.1 ஓவரில் 173 ரன்னுக்கு ஆல்  அவுட் ஆனது. ஆமிர் சோகைல் 62, ஜாவேத் மியான்தத் 40 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பவுலிங்கில் கபில்மனோஜ், ஸ்ரீநாத் தலா 2, சச்சின், ராஜு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் கிடைத்த 2வது வெற்றி இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. மொத்தம்ஆட்டத்தில் 5 தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. ஆக்லாந்தில் நடந்த முதலாவது அரை இறுதியில் பாகிஸ்தான் 4 விக்கெட்  வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இன்சமாம் 37 பந்தில் 60 ரன் விளாசி வெற்றிக்கு உதவினார். சிட்னி  மைதானத்தில் நடந்த 2வது அரை இறுதி ஆட்டம் சர்ச்சைக்குரியதாக அமைந்தது. மழையால் பாதிக்கப்பட்ட அந்த போட்டியில், இங்கிலாந்துக்கு  எதிராக 43 ஓவரில் 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸ் செய்த தென் ஆப்ரிக்காவுக்கு கடைசி 13 பந்தில் 22 ரன் தேவைப்பட்டது. 

அந்த சமயம் பார்த்து மழை கொட்டியதால் ஆட்டம் 12 நிமிடம் தடைபட்டு மீண்டும் தொடங்கியபோது, ஒரு பந்தில் 21 ரன் எடுக்க வேண்டும் என்று  நடுவர்கள் அறிவிக்க, தென் ஆப்ரிக்க வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கேலிக்கூத்தான விதியால் அந்த அணியின் பைனல் வாய்ப்பு  பறிபோனது. மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது. கேப்டன் இம்ரான் கான்  72, மியான்தத் 58, இன்சமாம் 42, அக்ரம் 33 ரன் விளாசினர். இங்கிலாந்து 49.2 ஓவரில் 227 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆக, பாகிஸ்தான்  அணி உலக கோப்பையை முத்தமிட்டது.ஆட்ட நாயகனாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், தொடர் நாயகனாக நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோவ்  தேர்வு செய்யப்பட்டனர். 

* மார்டின் குரோவ் 9 போட்டியில் 456 ரன் குவித்து (அதிகம் 100*, சராசரி 114) முதலிடம் பிடித்தார். 

* விக்கெட் வேட்டையில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 10 போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார்.
* பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 119 ரன் விளாசியது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக  அமைந்தது. இந்திய அணி கேப்டன் அசாருதீனுக்கு (93) பத்தாவது இடம் கிடைத்தது. 
* மொத்தம் 8 சதங்கள் அடிக்கப்பட்டன. ஆஸி. வீரர் டேவிட் பூன் 2 முறை 100 ரன் எடுத்தார்.
* ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன் குவித்தது அதிகபட்ச ஸ்கோராகும்.



No comments: