Saturday, November 8, 2014

தனி மரமான வாசன்

 இந்திய  நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் வெளியேறப்போகிறார்  என்ற  செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.  தே ர்தலின்போது ஏற்பட்ட எதிர்பார்ப்பை வாசன் பொய்யாக்கினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மேலிடம் அவர் மீது நம்பிக்கை இழந்தது. அவர் விரும்பிய சிலர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கவில்லை. இதை எல்லாம் மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் உள்ளன. வாசன் தலைமயிலான கோஷ்டி மிகப்பலமானது  1996 ஆம் ஆண்டு வாசனின் தகப்பன் ஜி.கே .மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணைந்து போட்டியிட்ட அவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது. ஊழல் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்வதை எதிர்த்து முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் க ழகத்துடன் இணைந்து படு தோல்வியடைந்தார்.
புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இப்போது இல்லை. ஆனாலும் துணிந்து  கட்சியை  ஆரம்பித்து விட்டார் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் உள்ளே கனன்று கொண்டிருந்த அனல் வெளிப்பட்டுவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமைப் பொறுப்பில்  இருந்து ஞானதேசிகன் இராஜினாமா செய்தபின்னர்  வாசன் புதிய கட்சியைப்பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. இப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை உள்ளது . அந்த அலையால்  வாசனுக்கு எந்தவிதமான விதமான இலாபமும் இல்லை. எழமுடியாத  அதல பாதாளத்தில் காங்கிரஸ் கட்சி விழுந்துள்ளது. தமிழகத்தில் இப்போது தேர்தல் நடைபெறும் சூழல் இல்லை. ஆகையினால் வாசனின் புதிய கட்சியுடன் இணைவதற்கு பெரிய கட்சிகள் இப்போதைக்கு தயாராக இல்லை. தேர்தல் நெருங்கும் போது பெரிய கட்சிகள் தன்னைத்தேடி வரும் என வாசன் நம்புகிறார்.


முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது ப.சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன்,ஆதித்தன், அருணாசலம், தனுஷ்கோடி ஆனந்தன் , எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற தலைவர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் வாசனுக்கு ஆதரவாக ஞானதேசிகனைத்தவிர வேறு யாரும் இல்லை. ஞான‌தேசிகனுக்கு மக்கள் ஆதரவு இல்லை.



ஞானதேசிகன் இராஜினாமாச்செய்த உடனே  இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ராகுல், சோனியா ஆகியோருக்கு விசுவாசமானவர் இளங்கோவன். மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்துபோய் புதிய கட்சியை ஆரம்பித்தபோதும் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். மூப்பனாரின் மகன் இப்போது காங்கிரஸில் இருந்து பிரிந்தப்போதும் தலைமைப் பதவி இளங்கோவனைத் தேடிவந்துள்ளது. பிரிந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற  கழகம் ஆகியவற்றுடன்  கூட்டணி சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் இளங்கோவன். காங்கிரஸை தூக்கி நிறுத்த வேண்டிய தலையானபணி இளங்கோவனுக்கு உள்ளது.   நேருகுடும்பத்துக்கு  வெளியே உள்ள ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என  சிதம்பரம் கூறி உள்ளார். இதனை ராகுலும்,சோனியாவும் ரசிக்கவில்லை.  ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். இதுவும் சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. ஆகையினால் அடுத்தகுறி சிதம்பரமாக இருக்கலாம். அப்படி ஒருநிலை ஏற்பட்டால் அவர் வாசனுடன் சேர்ந்துவிடுவார். அது வாசனுக்கு பெரும் பலமாக அமைந்துவிடும்.
தமிழகத்தில்  ஏதாவது மாற்றங்கள் செய்யும்போது தமிழகத் தலைவர்களுடன் ஆலோசனை செய்வது வழமை . இளங்கோவனைத் தலைவராக்கியபோது ஒப்புக்குக்கூட யாரையும் கலந்தாலோசிக்கவில்லை.  இளங்கோவனைத்  தவிர மற்றவர்களை மத்திய காங்கிரஸ் தலைவர்கள் நம்பவில்லை. இதனால் இளங்கோவன் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்க உள்ளார். இதனால் தமிழக காங்கிரஸில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உண்டாகும். இது வாசனுக்கு சாதகமாக அமையும். 

No comments: