Thursday, June 30, 2011

மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸில், நோர்வே வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் பிரேஸில், நோர்வே ஆகியன வெற்றி பெற்றன. பிரேஸில், அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வெற்றி பெற்றது.
உதைப்பந்தாட்டப் போட்டிகளில் பிரேஷில் ஆண்கள் அணி பல சாதனைகளை செய்துள்ளது. ஆனால் பெண்கள் அணி பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. இந்தப் போட்டியில் பிரேஸில் அணி வெற்றி பெற்றாலும் அவுஸ்திரேலியா வீராங்கனைகள் போராடித் தோல்வியடைந்தனர்.
அவுஸ்திரேலியாவில் இளம் வீராங்கனைகள் பிரேஸிலுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்தனர்.
போட்டியின் முதல் பாதியில் கோல் அடிக்கப்படவில்லை. 54 ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் வீராங்கனையான ரொஸானா கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். பிரேஸில் வீராங்கனைகள் 14 தடவை கோல் அடிப்பதற்கு முயற்சி செய்தனர்.
நான்கு தடவை கோல் அடிக்கும் சந்தர்ப்பத்தை அவுஸ்திரேலிய வீராங்கனைகள் தடுத்துவிட்டனர்.
அவுஸ்திரேலிய வீராங்கனை 12 தடவை கோல் அடிக்க முயற்சித்தனர். மூன்று தடவை கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது பிரேஸில் வீராங்கனைகள் தடுத்து திறந்திவிட்டனர். அவுஸ்திரேலிய வீராங்கனைகளின் கால்களில் அதிக நேரம் பந்து இருந்தது. இறுதி நேரத்தில் பிரேஸில் வீராங்கனைகள் தடுத்து ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். சிறந்த வீராங்கனையாக ரொஸானா தெரிவு செய்யப்பட்டார்.
நோர்வே, கினிய ஆகியவற்றுக்கிடையோன போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் நோர்வே வெற்றி பெற்றது. நோர்வே எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் கினியாவின் விளையாட்டு சிறப்பாக இருந்ததனால் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே நோர்வே வெற்றி பெற்றது. கோல் அடிப்பதற்கு நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் கினிய வீராங்கனைகள் முறியடித்தனர். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 84 ஆவது நிமிடத்தில் நோர்வே வீராங்கனையான ஹொலி கோல் அடித்து நம்பிக்கையூட்டினார்.
கினிய வீராங்கனைகள் மிகவும் ஆக்ரோஷமாக நோர்வே கோல் கம்பத்தை ஆக்கிரமித்திருந்தனர். 88, 89 ஆவது நிமிடங்களில் கினிய வீராங்கனைகள் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்துகளை நோர்வே கோல் கீப்பர் தடுத்தார்.
நோர்வே வீராங்கனைகள் இரண்டு பேருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
கினிய கோல் அடிப்பதற்கு அதிக சந்தர்ப்பம் கிடைத்தது. நோர்வே வீராங்கனைகள் அதனை முறியடித்து விட்டனர். கினிய வீராங்கனைகளின் விளையாட்டு குழு "டி' யில் உள்ள ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கையாக உள்ளது. சிறந்த வீராங்கனையாக நோர்வேயின் கோல் கீப்பர் இன் கிரிட் ஹஜ்மெத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
மெட்ரோநியூஸ்

ஜேர்மன் , பிரான்ஸ் வெற்றி

நடப்புச் சாம்பியனான ஜேர்மனி, கனடா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2-1 கோல்களினால் ஜேர்மனி வெற்றி பெற்றது.
இரண்டு முறையும் சம்பியனான ஜேர்மனி மூன்றாவது முறை சம்பியனாகும் முனைப்புடன் களம் புகுந்துள்ளது.
ஒலிம்பியா மைதானத்தில் நடைபெற்ற போட்டியைக் காண்பதற்கு 73,680 ரசிகர்கள் குழுமியிருந்தனர்.
பிரான்ஸ், நைஜீரியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.
ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் ஜப்பான் கடுமையாகப் போராடி வெற்றிபெற்றது. இங்கிலாந்து மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஜப்பான், நியுசிலாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் ஜப்பான் அதிக ஆதிக்கம் செலுத்தியது. நியூசிலாந்து வீராங்கனைகளும் தமது திறமையை வெளிப்படுத்தினர்.
ஆட்ட நேர முன் பாதியில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டத்தில் பரபரப்ப> ஏற்பட்டது. இரண்டாவது பாதியின் 18 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்குக் கிடைத்த பிரீகிக் வாய்ப்பை அயமியாமா கோலாக்கியதில் ஜப்பானின் வெற்றி பிரகாசமாகியது.
இரண்டாவது கோலை அடித்து போட்டியைச் சமநிலைப்படுத்த நியூசிலாந்து மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.
ஜப்பானுக்கு கோல் அடிக்க 15 சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றில் கோல் கம்பத்தை நோக்கி ஆறு தடவைகள் ஜப்பான் வீராங்கனைகள் அடித்தன. மெக்ஸிக்கோவுக்கு 5 சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒரு சந்தரப்பம் கம்பத்தை நோக்கி அடிக்கப்பட்டது. ஆட்டநேரத்தின் போது 61 சதவீதமான நேரத்தில் ஜப்பான் வீராங்கனைகள் பந்தை தம்வசம் வைத்திருந்தனர்.
öம்சிக்கோ, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. 2-1 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனையான வில்லியம்ஸ் கோல் அடித்தார்.
33 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ வீராங்கனையான எகம்போ ஒரு கோல் அடித்து சமப்படுத்தினார். இரண்டு அணிகளும் கோல் அடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் எதிரணியினால் முறியடிக்கப்பட்டது.
ரமணிமெட்ரோநியூஸ்

Monday, June 27, 2011

காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிறது தி.மு.க.

அரசியலில் பல தடைகளையும், சோதனைகளையும், வீழ்ச்சிகளையும் சந்தித்து வீறு கொண்டெழுந்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி, வேதனை போன்றவற்றினால் துவண்டு போகாத கருணாநிதி தன்மகள் கனிமொழி சிறையில் இருப்பதைத் தாங்க முடியாது துவண்டு போயுள்ளார்.
வலுவான ஆதாரம் இல்லாது சி.பி.ஐ. குற்றவாளி என சந்தேகப்படுபவரை நெருங்காது. சி.பி.ஐ. ஒருவரைச் சந்தேகத்தில் கைது செய்தால் அவர் பிணையில் வெளிவருவதற்கான சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. சிறப்பு நீதிமன்றத்தின் விதிமுறைகள் சி.பி.ஐ. க்கு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுதலை செய்யக் கூடாது என்று சி.பி.ஐ. கூறியுள்ளது. அவர்கள் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்று சி.பி.ஐ. கூறுகிறது. அரசியலிலும், சமூகத்திலும் செல்வாக்குமிக்கவர்கள்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. ஸ்பெக்ட்ரம் மெகா தொடர் போன்று நீண்டு கொண்டே போகின்றது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னாள் அமைச்சர் ராசாவும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான் பொறுப்பு. அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்பது போல் காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையில் சுமத்தி விட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலேதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. ஆகையினால் இப்பிரச்சினைக்குப் பதில் கூற வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. ஆபத்தான வேளையில் கைவிடுவது நட்புக்கு அழகல்ல என்று இடித்துரைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
கனிமொழியின் பிணை மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததனால் மகளைப் பார்ப்பதற்காக டில்லிக்குச் சென்றார் கருணாநிதி. டில்லியில் அவருக்குக் கொடுக்கவேண்டிய மதிப்பையும், மரியாதையையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்பார். அவர் தங்கி இருக்கும் இடத்துக்கு மரியாதை நிமித்தமாகச் சென்று சில பிரமுகர்கள் சந்திப்பார்கள். அந்த நடைமுறை இம்முறை கைவிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் டில்லிக்குச் சென்றபோது தடல்புடல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லையே தவிர அவர்களுக்கு நெருக்கமானவர்கள்தான் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் கருணாநிதியை மதிக்காததும் திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டில்லியில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஒருவரான கருணாநிதி அப்போது டெல்லியில் இருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவரான அவர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை. டி.ஆர். பாலு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபற்றினார். லோக் பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னை ஹசாரே போன்றவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர முடியாது. பிரதமரை எவரும் விசாரிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. இதே நிலைப்பாட்டில்தான் கூட்டணிக் கட்சிகளும் உள்ளன.
லோக்பால் விசாரணை வரையறைக்குள் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர். பாலு தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களும் எதிர்க்கட்சிகளும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுத்தது காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்பால் மசோதா பற்றிய கருத்துகளை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. லோக்பால் மசோதா பற்றிய கருத்துகளை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார். டி.ஆர். பாலுவின் கருத்துகளால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி கைவிட்டு விட்டது. அதே விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சிக்க வைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் வியூகம் வகுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் பி. சிதம்பரம், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி ஆகியோரையும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து சற்றுத் தள்ளியே நிற்பதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. இந்த நிலையில் டி.ஆர். பாலுவின் கருத்து காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. இளங்கோவன், யுவராஜ் போன்றவர்கள் அறிக்கைப் போர் விடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுமையைச் சாதிக்கிறார்கள். கருணாநிதியும் சளைக்காது பதிலறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் பிரியக் கூடாது என்று சில தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தொண்டர்களின் மனநிலை இதற்கு எதிர்மாறாக உள்ளது. தொண்டர்களின் விருப்பத்தைத் தலைவர்கள் நிறைவேற்றும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு26/06/11

Sunday, June 26, 2011

பெண்களுக்கான உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி




பெண்களுக்கான உலகக்கிண்ண உதை பந்தாட்ட சுற்றுப்போட்டிஇன்று ஞாயிற்றுக்கிழமை "ஜேர்மனியில் ஆரம்பமாகிறது. 16 நாடுகள் இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளன. ஜேர்மனியிலுள்ள மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து நைஜீரியா, ஆசியக் கண்டத்தில் இருந்து வட‌ கொரியா, ஜப்பான், பசுபிக் தீவுகளில் இருந்து நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஐரோப்பாக் கண்டத்திலிருந்து நோர்வே,இங்கிலாந்து,பிரன்ஸ், சுவீடன் வட மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து பிரேசில், கொலம்பியாஈக்குவடோர் ஆகியவையும், போட்டியை நடத்தும் நாடாகிய ஜேர்மனியும் பெண்களுக்கான உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
குழு "ஏ'யில் நைஜீரியா, கனடா, ஜேர்மனிபிரான்ஸ், குழு "பீ'யில் ஜப்பான், மெக்ஸிக்கோ, நியூசிலாந்து,இங்கிலாந்து குழு "சீ'யில்வட‌கொரியா, அமெரிக்கா, கொலம்பியா, சுவீடன்குழு டி யில் அவுஸ்திரேலியõ, நோர்வே, பிரேஸில் ஈக்குவடோர்ஆகிய நாடுகள் உள் ளன.
1991ஆம் ஆண்டு சீனாவில் முதலாவது பெண்களுக்கான உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 12 நாடுகள் இதில் பங்குபற்றின. 99 கோல்கள் அடிக்கப்பட்டன.
26 போட்டிகள் நடைபெற்றன. சுமார் 51,000 ரசிகர்கள் இதனைப் பார்வையிட்டனர். அமெரிக்கா, நோர்வே ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடின. அமெரிக்கா சம்பியனானது. சுவீடன் மூன்றாவது இடத்தையும், ஜேர்மனி நான்காவது இடத்தையும் பிடித்தன.
அமெரிக்க வீராங்கனையான கரின் ஜென்னிங்ஸ் தங்கப் பந்து விருதையும், அமெரிக்க வீராங்கனையான மச்செலி கிரகரிஸ் தங்கக் காலணி விருதையும் பெற்றனர். சிறந்த அணியாக ஜேர்மனி தெரிவானது.
1995ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 12 நாடுகள் விளையாடின. 26 போட்டிகளில் 99 கோல்கள் அடிக்கப்பட்டன.
112,213 ரசிகர்கள் பார்வையிட்டனர். நோர்வேக்கும், ஜேர்மனிக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று நோர்வே சம்பியனானது.
மூன்றாம் இடத்தை அமெரிக்காவும், நான்காம் இட த்தை சீனாவும் பெற்றன. நோர்வே வீராங்கனையான ஹேக்ரிகி தங்கப் பந்தையும், நோர்வேயைச் சேர்ந்த வீராங்கனையான ஆன் கிறிஸ்ரீன் ஆரோன தங்கக் காலணியையும் பெற்றனர். சுவீடன் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டது.
1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 16 நாடுகள் பங்குபற்றின. 32 போட்டிகளில் 123 கோல்கள் அடிக்கப்பட்டன.
1,194,221 ரசிகர்கள் பார்வையிட்டனர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சீனா சம்பியனானது. மூன்றாவது இடத்தை பிரேஸிலும்பெற்றுக் கொண்டன.
சீன வீராங்கனையான சுங்வொங் தங்கப் பந்தையும், பிரேஸில் வீராங்கனையான சிசி, சீன வீராங்கனையான சுங்வென் ஆகியோர் தங்கக் காலணியைப் பெற்றுக் கொண்டனர். சிறந்த அணியாக சீனா தெரிவானது.
2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 16 நாடுகள் பங்குபற்றின. 32 போட்டிகளில் 107 கோல்கள் அடிக்கப்பட்டன. 679,664 ரசிகர்கள் பார்வையிட்டனர். ஜேர்மனி, சுவீடன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி சம்பியனானது. மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை கனடாவும் பெற்றுக் கொண்டன. ஜேர்மனி வீராங்கனையான பிரிக்பிரின்ஸ் தங்கப் பந்தையும், தங்கக் காலணியையும் பெற்றுக் கொண்டார். சிறந்த அணியாக சீனா தெரிவானது.
2007ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 16 நாடுகள் பங்குபற்றின. 32 போட்டிகளில் 111 கோல்கள் அடிக்கப்பட்டன. 997,433 ரசிகர்கள் பார்வையிட்டனர்.
மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை நோர்வேயும் பெற்றுக் கொண்டன. பிரேசில் வீராங்கனையான மரா தங்கப் பந்தையும், தங்கக் காலணியையும் பெற்றுக் கொண்டார். நோர்வே சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டது.
ஜேர்மனியில் நாளை ஆரம்பமாகும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 12 நாடுகள் போட்டியிடுகின்றன. தொடர்ந்து இரண்டு முறை சம்பியனான ஜேர்மனியே இம்முறையும் சாம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு உதைபந்தாட்ட ரசிகர்களிடம் உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Thursday, June 23, 2011

பிரிட்டிஷ் வீரர்களுக்கு இலவச ரிக்கெட்



இங்கிலாந்தில் சார்பில் 1948 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொண்ட 125 வீரர்களுக்கு 2012 ஒலிம்பிக் போட்டியைப் பார்ப்பதற்கு இலவச ரிக்கட் வழங்கப்படுகிறது. 64 வருடத்திற்கு முன்பு வீரர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சியை பார்ப்பதற்கு இவர்கட்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அத்தோடு முன்பு ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றியவர்க்கு 4 ரிக்கட்டுகள் வாங்கலாம்.
1948 ஆம் ஆண்டு போட்டியில் பங்கு பற்றியவர்க்கு நிகழ்ச்சியின்போது மதிய உணவும், தீபத்தை கொண்டு செல்வதில் பங்குபற்றும் சந்தர்ப்பம் வழங்க ஒலிம்பிக் சபை (ஆOஅ) ஆலோசித்து வருகிறது. 60 வருடத்திற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் பங்குகொண்ட ஜோன் பீக் கருத்துத் தெரிவிக்கும் போது இது ஒரு நல்ல செய்தி. எனது மனைவியுடன் ஒரு பார்வையாளராக பங்குபற்றலாமென மகிழ்ச்சி தெரிவித்தார்.
1948 போட்டிக்கு பிறகு நான் எனது பல நண்பர்களைக் காணவில்லை. இக்கொண்டாட்ட விருந்தின் போது இவர்களைக் காணக் கூடிய சந்தர்ப்பமுண்டு என்று கூறினார். 1948 ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றியவர்கள் எமக்கு பெருமை சேர்த்தவர்கள். அவர்கள் 2012 போட்டியில் கலந்து கொள்வது மிகவும் வரவேற்கப்படக் கூடியது என பிரிட்டிஷ் ஒலிம்பிக் சபையின் தலைவர் கொலின் மொய்நிகான் கூறுகிறார்.
மெட்ரோநியூஸ்

அ.தி.மு.கவை நெருங்குகிறது காங்கிரஸ்நெருக்கடியில் தத்தளிக்கிறது தி.மு.க.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டில்லி விஜயம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி டில்லிக்குச் செல்லும் போதெல்லாம் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்புக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் டில்லிக்குச் சென்ற கருணாநிதியை திறந்த மனதுடன் காங்கிரஸ் கட்சி வரவேற்கவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போது கருணாநிதியின் சொல்லுக்குக் கட்டுப்படாது மிரட்டும் தொனியில் 63 தொகுதிகளைப் பெற்றது. இதையெல்லாம் அவமானமாகக் கருதாத கருணாநிதி மத்திய அரசுடன் சிநேகமாக இருந்தார்.
ஜெயலலிதா முதல்வரானதும் டில்லியின் கட்சி அப்படியே மாறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சோனியா காந்தியுடன் மிகவும் நெருக்கமானவரான டில்லி முதல்வர் லீலா தீட்ஷித் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார். தமிழக முதல்வர் என்ற மரியாதையின் நிமித்தம் தான் இந்தச் சந்திப்பு என்று வெளியில் கூறப்பட்டாலும் இதன் பின்னணியில் பலமான அரசியல் அத்திவாரம் உள்ளது. சோனியாவின் ஒப்புதல் இன்றி இது நடைபெற்றிராது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடுவதற்கு காங்கிரஸ் கட்சி எப்பவோ தயாராகி விட்டது. ஆனால் காங்கிரஸைக் கைவிட முடியாத சூழ்நிலைக் கைதியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. காங்கிரஸுடனான உறவை முறிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறிய போதெல்லாம் பொறுமை காக்கும்படி கூறினார் கருணாநிதி. தற்போது காங்கிரஸ் கட்சியுடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்பும் போது திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் அதற்கு முட்டுக் கட்டை போடுகிறார்கள். தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த கழகம் தனி நபர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கூடிய செயற்குழு அதிரடியான தீர்மானங்களை நிறைவேற்றி தனது சுயமரியாதையை வெளிக்காட்டியது. கழகத்துக்கு அவமானம் ஏற்பட்டால் பொங்கி எழும் செயற்குழு சும்மா பெயருக்குக் கூடிக் கலைகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையும் ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுய மரியாதையை இல்லாமல் செய்து விட்டது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகம்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது. தமிழக சட்ட சபை முடிவு வெளியாகி சுமார் ஒரு மாதத்தின் பின்னர் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் கொள்கையை வெளியிடும் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தின் பின் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸுடனான தொடர்பை விட்டு விடவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் ஜெயலலிதா. எனது ஆதரவு தேவை என்றால் அவர்கள் கேட்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அறை கூவல் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடம் இருக்கிறது. அதுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடாமலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நெருங்காமலும் இருக்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ். மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி எதுவும் ஏற்படப் போவதில்லை. மத்திய அரசில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் மிகுந்த பாதிப்பு ஏற்படும். அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் அடங்கி இருக்கிறது.
இலங்கைப் பிரச்சினை பற்றி டில்லியிலும் முழங்கியுள்ளார் ஜெயலலிதா. கச்சதீவை மீளப் பெற வேண்டும். இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற ஜெயலலிதாவின் கோரிக்கைகள் சில மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்திய மத்திய அரசு பூரண ஆதரவையும் ஆசியையும் வழங்கியது. இலங்கைக்கு ஆதரவளித்த இந்திய மத்திய அரசிடம் இலங்கையைத் தட்டிக் கேட்கும்படி முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் கோரிக்கைகளுக்காக இலங்கையைப் பகைத்துக் கொள்ள இந்திய அரசு தயாராக இல்லை.
டில்லிக்குச் செல்லும் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவி சோனியாவைச் சந்திப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டது. அம்மா டில்லியில் இருந்து திரும்பும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கூட்டணி பிறந்து விடும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். இரண்டுமே நடக்காததால் தொண்டர்கள் மனமுடைந்துள்ளார்கள்.
அரசியல் அரங்கில் வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழகப் பெற்றோர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். ஆங்கிலக் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா இடை நிறுத்தியது கல்வி ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியின் மீதான கோபத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தை ஜெயலலிதா கேள்விக்குறியாக்கியுள்ளார். மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் உள்ள செம்மொழிச் சின்னத்தை மறைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அடையாளங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இவை அ.தி.மு.காவின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு19/06/11

Wednesday, June 22, 2011

வெற்றியை எதிர்வுகூறத் தயாராகிறது ஒக்டோபஸ்




ஜேர்மனியில் நடக்க இருக்கும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் ஆருடம் கூறுவதற்காக 8 ஒக்டோபஸ்கள் தெரிவு செய்யப்பட்டு பல பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
கடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் வெற்றியாளரைச் சரியாக ஆருடம் செய்த போல் என அழைக்கப்பட்ட ஒக்டோபஸ் மரணமானதைத் தொடர்ந்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறுகிறார் ஜேர்மனியைச் சேர்ந்த பிரிட்டா அன்லொவ்.
ஜேர்மனியில் நாளை மறுதினம் போட்டி ஆரம்பமாகிறது. போட்டி நடக்கும் மைதானங்களில் ஒரே விதமான இயந்திரங்கள் வைக்கப்படும். ஜேர்மனியில் பங்கு பற்றும் ஒவ்வொரு போட்டியிலும் காலை 11 மணிக்கு இவை பேர்லின் ஹனேவர் கொசிக்ஸ்வின்னர், கொன்ய்ரன்ஸ், மூனிச், ஸ்மேயர், ரிமென்டோவர், போலின் சொந்த ஊரான ஓபர் சுனி ஆகிய இடங்களில் களமிறக்கப்படும்.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் கடந்த போட்டியின் 3 ஆவது ஜேர்மனி விளையாடிய எட்டு போட்டிகளிலும் முடிவை போல் ஆருடம் காட்டியது. அதே விதிமுறை இம்முறையும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.
பிரிட்டனில் பிறந்த அந்த ஒக்டோபஸ் இன் சாகசங்கள் உலகெங்கும் பிரபல்யமானது. இதன் மூலம் பல பந்தயக் காரர்கள் நட்ட பணத்தை சம்பாதித்துள்ளார்கள். இப் பிராணியை போல் உலக கோப்பை இறுதி போட்டியில் நெதர்லாந்தை ஸ்பெயின் வெற்றி கொள்ளும் என்றும் ஆருடம் கூறியது.

மகளிருக்கான உலகக் கிண்ண உதைபந்தாட்ட நுழைவுச் சீட்டுகள் விற்பனை





ஜேர்மனியில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பெண்களுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு ஆறு இலட்சத்து 70 ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இப் போட்டிகளுக்கான பொது விற்பனைக்கென ஒதுக்கப்பட்டுள்ள 900,000 நுழைவுச் சீட்டுகளில் 75 வீதத்தை உள்ளடக்கியதாகவே இத்தொகை அமைந்துள்ளதாக உள்ளூர் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்டெபி ஜோன்ஸ், ஜேர்மன் பராபோட்டிங்கிலுள்ள உதைபந்தாட்டக் கழகத் தலைமையகத்தில் தெரிவித்தார்.
முப்பத்திரண்டு ஆட்டங்களில் முப்பது ஆட்டங்களுக்கென ஆகக் குறைந்தது 10,000 நுழைவுச்சீட்டுகள்விற்றுத் தீர்க்கப்பட்டுள்ள அதேவேளை, ஜேர்மனியில் முதன் முதலாக நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளுக்கான ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதன் அடையாளமாக பதினைந்து போட்டிகள் தலா 20,000 ரசிகர்கள் மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஜோன்ஸ் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனியில் நடைபெறவுள்ள பெண்களுக்கான உலகக் கிண்ண உதைபந் தாட்டப் போட்டிகள் வெற்றிகரமானவையாகத் திகழப்போவதனை இத்தகைய ரசிகர்களின் நல்லாதரவு பறைசாற்றுகிறதெனவும் விளையாட்டரங்குகளின் மொத்த கொள்ளளவின் 80 வீதமான இருக்கைகளை இதன் மூலம் எம்மால் நிரப்பிக் கொள்ள முடியுமெனவும் ஜேர்மனியில் கொள்வனவு செய்யப்படும் நுழைவுச் சீட்டுகளுக்கு மேலதிகமாக தன்சானியா, பொலிவியா, பிஜி மற்றும் லெபனான் உள்ளிட்ட ஏனைய ஐம்பது நாடுகளிலிருந்தும் நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவுக் கட்டளைகள் வந்து குவிந்துள்ளதாகவும் கூறினார். மேலும் ஜேர்மனியில் உள்ள ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்க வெளிநாட்டு குழுக்கள் மூலம் அந்தந்த நாடுகளின் பார்வையாளர்கள் சார்பான விண்ணப்பங்களை ஏற்பாட்டுக்குழுவின் நுழைவுச் சீட்டு நிலையம் கையாண்டு வருவதாகவும் கடந்த வாரம் ஜப்பானில் முடிவடைந்த தங்கள் நல்வரவுச் சுற்றுலா மூலம் இச்சுற்றுப் போட்டிகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாகவும் பல்வகை கலாசாரப் பின்னணியைக் கொண்ட ரசிகர்கள் கூட்டம் இச்சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க தமக்கு வலு சேர்க்கும் ஒன்றாகத் திகழ்வதனை தாம் மனமுவந்து வரவேற்பதாகவும் ஜோன்ஸ் மேலும் தெரிவித்தார்.

மெட்ரோநியூஸ்

Wednesday, June 15, 2011

தமிழக அரசின் தீர்மானத்தால்கருணாநிதிக்கு நெருக்கடி

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு சாதக சமிக்ஞை காட்டும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு சில விடயங்களில் மத்திய அரசை எதிர்ப்பதற்குத் துணிந்துள்ளதை தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி யைப் போலல்லாது அதிரடியாகச் செயற்படுகிறார் ஜெயலலிதா. இலங்கை அரசையே போர்க் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்ட சபையின் தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
இலங்கையில் உச்ச கட்டப் போர் நடந்து கொண்டிருக்கையில் முதல்வராக இருந்த கருணாநிதி இதுபோன்ற நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படும் போதும் போர் உச்சக் கட்டத்தை அடைந்த போதும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் கடிதங்கள் அனுப்பினார் கருணாநிதி. இது தவிர உண்ணாவிரத நாடகம், அமைச்சர் ராஜினாமா போன்றவற்றினால் கருணாநிதி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானாரே தவிர உருப்படியான காரியம் எவையும் நடைபெறவில்லை.
தமிழக அரசின் தீர்மானத்தினால் இலங்கை அரசுக்கு அரசியல் நெருக்கடி எவையும் ஏற்படப் போவதில்லை. இந்திய இலங்கை உறவில் விரிசல் ஏற்படப் போவதில்லை. தமிழக அரசைப் போன்று வேறு மாநில சட்ட சபைகளிலும் இதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அதனைச் சமாளிப்பதற்குரிய வழி வகைகளைத் தேட வேண்டிய சூழ்நிலைக்கு இந்திய மத்திய அரசு தள்ளப்படும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழக மக்களும் ஜெயலலிதாவை எதிர்த்து கடுமையாக விமர்சித்தவர்களும் தமிழக அரசின் தீர்மானத்தை அகமகிழ பாராட்டியுள்ளனர். இலங்கைக்கு எதிரான ஒரு இறுதிப் பொறி இந்தியாவில் எழுந்துள்ளது. தமிழக சட்ட சபைத் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும். அது பற்றி விவாதம் நடைபெறவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம்.
தமிழக சட்ட சபைக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆளுநர் ஆற்றிய உரை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப் பட்ட புதிய தலைமைச் செலயக நிர்மாணப் பணிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். தமிழக சட்ட சபைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட மேலவை தேவையற்றது என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
புதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை ஆகிய இரண்டும் கருணாநிதியின் கனவுகள் கருணாநிதிக்கு ஆதரவாளரான ஆளுநர் மூலமாகவே அவை நிறைவேற்றப்படமாட்டாது என்று அறிவிக்க செய்தார் முதல்வர் ஜெயலலிதா. மாநில அரசின் செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காத ஒருவரே ஆளுநராக நியமனம் பெறுவது வழமை. மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கோட்டில் பயணம் செய்யும்போது எழுதப்படாத விதியாக இது கருத்தில் கொள்ளப்படுகிறது. கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவரான பர்னாலா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் இந்த ஆண்டின் இறுதியில் முடிகிறது. தமிழக அரசின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவையாக இருப்பதனால் ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்படக் கூடிய ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார்.
ஸ்பெக்ரம் 2ஜி விவ காரம் மேலும் இறுக்கமானதால் கருணாநிதி ஆடிப் போயுள்ளார். தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பதை அறி வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார் கருணாநிதி. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவில் ஆரம்பித்த ஸ்பெக்ரம் விசாரணை அமைச்சர் கனிமொழியையும் சிறையில் தள்ளியுள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. தோண்டித் துருவு வதால் கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி ஆகியவையும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளன.
ஸ்பெக்ரம் விவகாரத்தில் இருந்து கனிமொழியை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதிலேயே கருணாநிதி அதிக முனைப்புக் காட்டுகிறார். ஆனால் இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் சி.பி.ஐ. மேலும் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களையும் அவர்களுக்கு ஆதரவாளர்களையும் குறி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது சி.பி.ஐ.
சி.பி.ஐ. யின் விசாரணை ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்திய ஊடகங்கள் அமைச்சர் தயாநிதிமாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகின்றன. இந்திய ஊடகங்களில் விலாவாரியாக வெளிவரும் இந்த ஆதாரங்கள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு பெரும் பொக்கிஷசமாக உள்ளன. மகளை வெளியே கொண்டுவர கருணாநிதி முயற்சி செய்கிறார். ஆனால் பேரனும் உள்ளே போகப் போகிறார் என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது அமைதி காத்த ஊடகங்கள் சில ஆட்சி மாறியதும் ஆதாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. அஸ்தமித்த சூரியன் இனி உதிக்காது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். சூரியன் அஸ்தமிக்குமா சுட்டெரிக்குமா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கருணாநிதி குழம்பிப் போயுள்ளார்.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு19/06/11

Wednesday, June 8, 2011

அரசியலா , குடும்பமா?குழம்புகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த தவறுகளில் இருந்து ஜெயலலிதா பாடம் படித்துள்ளõர் போலத் தெரிகிறது. ஆடம்பரம், படாடோபம் என்பனவற்றை உதறித் தள்ளியுள்ளார். அரசு விழாக்கள் மிக எளிமையாக நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆள் உயர கட் அவுட்கள், வாழ்த்துக் கோஷங்கள் எதுவுமே இல்லை. முதல்வர் ஜெயலலிதா மீதும் தமிழக அரசின் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் வந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.
தமிழக அரசை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன் எச்சரிக்கையாக செயற்படும் முதல்வர் ஜெயலலிதா முன்னைய அரசு செய்த சாதனைகளை, தடயங்களை அடியோடு அழிப்பதில் உறுதியாக உள்ளார். மிகப் பிரமாண்டமாக நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய தலைமைச் செயலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு எப்போது விடை கிடைக்கும் என்று தெரியாது. இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்படாது முடிவுக்கு வந்துள்ளது. ரூபாவுக்குப் படி அரிசி கருணாநிதி கொடுத்தார். ஜெயலலிதா அதனிலும் ஒருபடி மேலே போய் இலவச அரிசி கொடுத்துள்ளார். இலவச காஸ், மடிக்கணனி, தாலிக்குத் தங்கம் என்பன கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் துரிதமாக செயற்படுத்தப்படவுள்ளன.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வியை இடை நிறுத்தியது சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.
சமச்சீர் கல்விப் புத்தகத்தில் கருணாநிதியின் கவிதை இருந்ததனால்தான் சமச்சீர்க் கல்விப் புத்தகத்தை தமிழக அரசு தடை செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன இதற்குத் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எனது கவிதையை அகற்றி விட்டுப் புத்தகத்தை வெளியிடுமாறு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணாநிதியின் மீதான வெறுப்பினால் தமிழக மாணவர்களின் கல்வியுடன் தமிழக அரசு விளையாடுகிறது. என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகள் எவையும் இது பற்றி வாய் திறக்கவில்லை. தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சிகள் பலமிழந்துள்ளன. ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
ஜெயலலிதாவின் கூட்டணியில் உள்ள இடது சாரிகளும் சிறு கட்சிகளும் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளன. இவை எதிர்க்கட்சியாகச் செயற்பட்டாலும் தமிழக அரசுக்கு ஆதரவான கட்சிகளாவே உள்ளன.
தமிழக அரசுக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தமிழக சட்ட சபையில் பலம் இல்லாத எதிர்க்கட்சிகளாக உள்ளன. சட்ட சபைக்கு வெளியே எதிர்க்கட்சியõகச் செயற்படுவதற்கு வைகோ முடிவெடுத்துள்ளார். தமிழக சட்ட சபையின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பிக்க முன்னரே தமிழக அரசு செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகள் வலுவிழந்த நிலையில் சட்ட சபையில் இடம்பெறாத மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபைக்கு வெளியே இருந்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திகழப் போவதாகத் தெரிகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடந்த காலத் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் கனிமொழியின் வழக்கு விவகாரத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத் தேர்தல் தோல்வி பற்றிய ஆய்வு எதனையும் செய்யவில்லை.
ஸ்டாலின் அழகிரி என ஆளுக்கு ஒரு திசையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கனிமொழி விவகாரத்தினால் ஒற்றுமையாகியுள்ளது.
ஊழல் வழக்கில் ராஜா சிறைப்பட்ட போது பதற்றமடையாத திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை கனிமொழி கைது செய்யப்பட்டபோது பதற்றமடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் இருந்த பிரிவினையை கனிமொழியின் கைது அகற்றியுள்ளது.
தமிழக முதல்வரின் டில்லிப் பயணத்தை பார்த்துக் காத்திருக்கிறது திராவிட முன்னேற் றக் கழகம். ஜெயலலிதா டில்லிக்குச் செல்லும்போது மன்மோகன், சோனியா ஆகியேõரைச் சந்திப்பாரா? அந்தச் சந்திப்பின் பின்னர் தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை ஆராய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழக சட்ட சபைத் தேர்தலின் வெற்றி அடுத்து வரும் தேர்தல்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அடுத்து வரும் மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று தனது இருப்பை வெளிக்காட்ட விரும்புகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
குடும்பமா? அரசியலா? என்று தடுமாறிக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தத் தடுமாற்றம் அதன் அரசியல் எதிர்காலத்துக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். திராவிட முன்னேற்றக்க கழகத்தினால்தான் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது என்ற கருத்து காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.
அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ளவர் விரும்புகின்றனர்.

வர்மா





சூரன்.ஏ.ரவிவர்மா






வீரகேசரிவாரவெளியீடு05/06/11

Wednesday, June 1, 2011

தடுமாறுகிறது தி.மு.கதயங்குகிறது காங்கிரஸ்

தமிழக சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் இன்றித் தவிக்கிறது. தோல்வியில் துவண்டு விடாது வீறு கொண்டு எழுந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஸ்பெக்ரம் விவகாரம் கட்டிப் போட்டுள்ளது. தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சி தெளிவதற்கிடையில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டது கருணாநிதியை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் விவகாரம் கிளறப்பட்டபோது இப்படிப் பூதாகரமாக எழுந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை சங்கடத்தில் ஆழ்த்தும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. உரிமைகளுக்கும் விடுதலைக்கும் போராட்டம் நடத்தி சிறை சென்ற தலைவரின் மகள் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதால் திராவிட முன்னேற்றக் கழகம் தலை குனிந்து நிற்கிறது. சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டதும் கருணாநிதியின் குடும்பத்தவர்கள் டில்லிக்கு விரைந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி படுதோல்வி அடைந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசல் விழுந்துள்ளது. ஸ்பெக்ரம், விலைவாசி, மின் வெட்டு, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் அடாவடி, குடும்ப அரசியல் என்பன தேர்தல் தோல்விக்குப் பிரதான காரணம் என திரõவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிதான் தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிரதான காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என் றும் அவர்கள் நம்புகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸும் இணைந்து ஆராயவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து மீளுவதற்கான வழிவகையைக் கண்டறிய இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மத்திய அரசின் ஒப்புதல் இன்றி சில சம்பவங்கள் நடந்திராது என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. தமது தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் உணர்ந்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. சிறையில் உள்ள கனிமொழியைப் பார்ப்பதற்காக டில்லிக்கு சென்ற கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க மாட்டேன் என்று அறிவித்ததன் மூலம் தனது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் டில்லியில் இல்லாத வேளையிலேயே தான், கருணாநிதி டில்லிக்குச் சென்றுள்ளார். சோனியாகாந்தி டில்லியில் இருந்தாலும் அவரைச் சந்திப்பதற்கு தான் விரும்பவில்லை என்பதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் அரசின் இரண்டாவது ஆண்டு விழாவில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. ஒப்புக்காக டி.ஆர். பாலு மட்டும் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்பட திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியை பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் மரியம் விபத்தில் மரணமானதால் முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்குரிய ஏற்பாடு எல்லாம் செய்யப்பட்டு சந்தோஷமாக இருந்த வேளையில் வெளிவந்த அமைச்சரின் மரணச் செய்தி சகுனத்தை நம்பும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பதை விசாரிப்பதற்கு சி. பி. ஐ. விசாரணை தேவை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகளை சி. பி. ஐ. வசம் ஜெயலலிதா ஒப்படைப்பார் என்று வெளியான தகவல்களை இது உறுதிப்படுத்துகிறது.
தமிழக ஆட்சி மாறியதும், உடனடியாகவே தலைமைச் செயலக அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் பொறுப்புகள் எதுவும் இல்லாத பதவிக்கு நியமிக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஓரம் கட்டப்பட்டவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. திரõவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்களை தொடர்வதற்கு ஜெயலலிதா விரும்புகிறார். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எம். ஜி. ஆர். காப்பீட்டுத் திட்டமாக மாற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வேறொரு காப்பீட்டு நிறுவனத்திடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் தோல்வி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சி யளித்துள்ள அதேவேளை சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் நெருங்குவதற்கு இந்த வாழ்த்து ஒரு சந்தர்ப்பம் எனக் கருதப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் டில்லி விஜயத்தின் பின்னர் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பெண் ஒருவர் தனது நாக்கை வெட்டிக் காணிக்கை செலுத்தினார்.
அப்பெண்ணின் சத்திர சிகிச்சைக்கு உதவி செய்து பண உதவியும் வழங்கிய ஜெயலலிதா அப்பெண்ணுக்கு அரச உத்தியோகம் வழங்கியதை நடுநிலையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
முதல்வராகப் பதவி ஏற்றதும் அதிரடியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள் ளது.


வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு26/05//11