Saturday, January 6, 2018

ரஜினியின் அரசியல் அரங்கேற்றம்

இந்திய அரசியலில் சாணக்கியம் புரிந்த கருணாநிதி மெளனமாகிவிட்டார். இரும்புப் பெண்மணி எனப் புகழப்பட்ட ஜெயலலிதா   மறைந்துவிட்டார். இதனால் தமிழக அரசியலில்  வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக   அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக அரசியல்,  சினிமாப்பின்னணியுடன் பெரும் விருட்சமாக வியாபித்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.

இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழகத்துக்கு இருக்கிறது. சினிமா நடிகர் ஒருவர்  அரசியல் கடையை விரித்துவிட்டால் அந்த வலையில்  விழுவதற்கு அப்பாவித்த தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பிரபலயப்படுத்துவதற்கு தமிழக ஊடகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.கடந்த ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் அவருக்குக் கொடுத்த முக்கியத்துவம் அளவிட முடியாதது.

ரஜினியைப் பற்றிய சிறு தகவலுக்குக் கூட பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது தமிழகத்தையும் இந்தியாவையும் தாண்டி உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறேன். தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகளிலும் கட்சியில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என ரஜினி அறிவித்ததும் அவரின் முன்னால் கூடி இருந்த ரசிகர்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும்  இந்தச்செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியின் முதலாவது அரசியல் குரல் வெளிப்பட்டது. ஜெயலலிதாவின் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிரான அலையின் போது கருணாநிதிக்கும் மூப்பனாருக்கும் ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார்.  ரஜினியின் பாட்ஷா படம் வெளியாகிய தருணத்தில் அதற்கு எதிராக அன்றைய முதல்வர் ஜெயலலிதா கருத்து வெளியிட்டபோது ரஜினியின் குரல் அரசியலாக வெளிப்பட்டது.  அப்போது நடைபெற்ற தேர்தலின் முடிவில் ஜெயலலிதாவின் தோல்வியும் கருணாநிதி, மூப்பனார் ஆகியோரின் இணைத் தலைமையின் வெற்றியும் ரஜினியின் குரலால் கிடைத்தாகத் தோற்றம் உண்டானது.

தமிழக ரசிகர்கள் மத்தியில் ரஜினிக்கு உள்ள செல்வாக்கினால் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருடன் இணக்கமாகச்செல்வதையே விரும்பினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  ரஜினிக்கு எதிராகச் செயற்பட்டார். பாபா படம் வெளியானபோது ரஜினி ரசிகர்களும் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் மோதிக்கொண்டனர். திரைப்படங்களில் ரஜினி சிகரெட்  புகைப்பதால் எழுந்த கோபம் மோதலாக வெடித்தது.  அப்போது கருணாநிதி தலமையிலான கூட்டணியில் ராமதாஸின் கட்சி இணைந்திருந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ரஜினியின் கோபம் ஜெயலலிதாவின் தலமையிலான இரட்டை இலைக்கு வாக்களிக்கத் தூண்டியது. அந்தத் தேர்தலிலும் அதற்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ரஜினியின் குரல் வெற்றியைக் கொடுக்கவில்லை.

அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு இருக்கிறது. அவரின் குடும்பத்தவர்களும் அதனை விரும்புகின்றனர். ஆன்மீகம், சோதிடம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் ரஜினி அதற்கான  காலம் வரும் வரையில் காத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு  தமிழக முதல்வர் பதவி தன்னைத் தேடிவந்தபோது தான்  ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். கால நேரம் பார்த்துத்தான் அரசியல் பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார்.

கமலின்  அரசியல்  கருத்துக்களால் டுவிட்டர் சூடாகி உள்ளது. கமல் அரசியலுக்கு வருகிறார் என்ற அறிவிப்பு அரசியலுலகில் வலம் வரத் தொடங்கியது. அதே நேரத்தில் ரஜனியில் அரசியல் பிரவேசம்  பற்றிய செய்திகளும் பரவத்தொடங்கியது.  தமிழகத்தின்  அடுத்தமுதலமைச்சர் ரஜினிதான் என சுமார் இருபது வருடங்களாக ஜோதிடர்கள் தெரிவித்து வருகின்றனர்.ரஜினி கிங் மேக்கராக இருக்கலாம் ஆனால், முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என கர்நாடகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்  தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள், ஊகங்கள்,வதந்திகள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டுள்ளது.தமிழ்த்திரை  உலகில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலில் உச்சத்தைத் தொடுவாரா என்ற விவாதம் களை கட்டத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் சுமார் 45 வருடங்களாக வாழும் ரஜினி, தமிழ் நாட்டு மக்களுக்காக என்ன செய்தார் என்ற  கேள்வி எழுந்துள்ளது. புயல்,வெள்ளம், சுனாமி போன்ற  இயற்கை அழிவுகளின்போது ஓடி வந்து கைகொடுத்தாரா என்ற கேள்விக்கு ரஜினியை ஆதரிப்பவர்களிடம் பதில் இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை, தமிழக மீனவர்கள் கடலில் சுட்டுக்கொல்லப்படுவது, ஜல்லிக்கட்டுப் போராட்டம், மீதேன் பிரச்சினை போன்றவற்றின் போது ரஜினி என்ன செய்தார் என்று வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ரஜினியை ஆதரிப்பவர்களால் பதில் கூறமுடியவில்லை.  

தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினயான காவிரி நீர் பற்ரி ரஜினி என்றைக்குமே வாய் திறக்கவில்லை. ரஜினியின் சொந்தமநிலமானகர்நாடகத்துக்கும்  அவரை வாழவைக்கும் தமிழகத்துக்குமிடையில் நீருக்காக தீப்பிடித்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. அப்போதெல்லாம் நியாயத்தின் பக்கம் ரஜினி நிற்கவில்லை.இது போன்ற அவரின் கடந்தகால சம்பவங்கள் எல்லாம் எதிர்காலத்தில் விமர்சனங்களூக்குள்ளாக்கப்படும்.

 எம்.ஜி. ஆரைப் போன்று ரஜினியும் அரசியலில்  வெற்றிபெறுவார் எனச்சிலர் கருதுகின்றனர். அம்.ஜி. ஆரின் ரசிகர்கள் அனைவரும் அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களாக இருந்தனர். அம்.ஜிஆர் கட்சியை விட்டுவெளியேறியபோது தொண்டர்களான அவரது ரசிகர்களும் கட்சியின் சில தலைவர்களும் அவருடன் சென்றனர். ரஜினியின் ரசிகர்கள் தமிழகக் கட்சிகள் பலவற்றில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.ரஜினியின் அரசியல்கொள்கையால கவரப்பட்டால் அவர்கள் இடம் மாறும் சந்தர்ப்பம் ஏற்படும். அரசியல் கொள்கை பற்றிக் கேட்டபோது இரண்டு நிமிடம் தலை சுற்றியதாக ரஜினி தெரிவித்த சொல் வைரலாகப் பரவியுள்ளது.

தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் தனது கட்சியில் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகவும் ரஜினி அரிவித்துள்ளார். ஊழல் அற்ற நேர்மையான அரசியல்வாதிகளை அவரால்தேடிப்பிடிக்க முடியுமா என யோசிக்க வேண்டி உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர் ஒரு கோடி ரூபா எனும் ரஜினியின் அறிவிப்பு ஏழைத் ரசிகனின் எதிர்பார்ப்பில் விழுந்த சாட்டை அடியாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப்பாவதாக ரஜினி அறிவித்துள்ளார்

ரஜினியின் பின்னால் இருந்து பாரதீய ஜனதாக் கட்சி இயக்குவதாக அவரது அரசியல் எதிரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆன்மீக ரசியல் என்ற ரஜினியின் அறிவிப்பு இதற்கு வலுச்சேர்த்துள்ளது.  இதனால் மற்றைய மதத்தவர்கள் ரஜினியை சந்தேகக்கண் கொண்டு பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரும் சமயத்திதை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு அரசியலில் ஜொலித்தவர்கள். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் போது கடவுளை ஆதரிக்கும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தடை போட்டவர். அரசியலில் கடைசி காலத்தில் கோயில்களுக்குச் சென்றவர்.  வெளிப்படையான கடவுள் நம்பிக்கையுடன் ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. ரஜினியின் மதக் கொள்கைக்கைக்குப் பரவலான எதிர்ப்பு உள்ளது. இதனை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உண்மை உழைப்பு நேர்மை என்பது ரஜினியின் அரசியல் கொள்கை. ஊழலற்ற அரசியல் என்கிறார். அரசியலில் இருந்து பிரிக்கமுடியாத அங்கமாக ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிஸ்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டும் என்பது ரஜினியின் விருப்பம். கறுப்புப் பணம் தாராளமாகப் புழங்கும் துறைகளில் சினிமாவும் ஒன்று. சினிமாவில் உள்ள சிஸ்டத்தை முதலில் மாற்றும்படி அரசியல்வாதிகள் ரஜினிக்கு அறிவுரைகூறியுள்ளனர்.அண்மைக்கால இந்திய அரசியலில் தனிக்கட்சி ஆட்சி என்பது நடக்கமுடியாத ஒன்று. நடிகர் ரஜினியை சகலரும் விரும்புபார்கள். அரசியல்வாதி ரஜினிக்கு பலத்த எதிர்ப்பு இருக்கும். எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து வெற்றி  பெறுவதில்தான் ரஜினியின் எதிர்காலம் தங்கி உள்ளது.


Monday, January 1, 2018

புஷ்வாணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு

இந்திய அரசியலைப் பிரட்டிப் போட்ட வழக்குகளில் மிக முக்கிய வழக்கான 2ஜி  ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து  குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வழங்கப்பட்டது.

எமஜென்சி கால வழக்கு, போபஸ் பீரங்கி  ஊழல் வழக்கு என்பன தேர்தல் காலத்தில் துருப்புச்சீட்டாக  இருந்து காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியைக் கொடுத்தன. அதேபோன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றிய வழக்கு தேசிய ரீதியில் காங்கிரஸையும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தேர்தலில் தோற்கடித்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை மாட்டிவிட்ட சுப்பிரமணியன் சுவாமிதான் 2ஜி வழக்கின் பிதாமகன். தனது அரசியல் எதிரிகளை வழக்குகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் சுப்பிரமணியன் சுவாமி பின்னர் ஜெயலலிதாவுடன் இணக்கமாகப் போனார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அவரைத் தள்ளியே வைத்திருக்கிறது. மிகச்சிறந்த சட்ட வல்லுநர், சட்டத்துறை விரிவுரையாளர் என்ற பெயருடன் பவனிவரும் சுப்பிரமணியன் சுவாமி  செய்யும் அரசியலும் மாதம் சம்பந்தமான கருத்துக்களும் அவருக்குக் கரும் புள்ளிகளாக உள்ளன.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தொலை தொடர்புத்துறை அமைச்சராகத் தயாநிதிமாறன் பதவி வகித்தார். அவருடைய குடும்பப் பத்திரிகையான தினகரன் நடத்திய கருத்துக் கணிப்பால் மாறன் குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது   தயாநிதி மாறன் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தபின்னர். ஆர்.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சரானார் அப்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம்  எனப்படும் அலைக்கற்றை ஏலம்  நடைபெறுவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டது. ஏலம் நடத்துவதைத் தவிர்த்து முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ஆர்.ராசா கடைப்பிடித்தார்.அந்தக் கொள்கைதான் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல் வரலாற்றில் சுனாமியாகச் சுழன்றடித்தது 

அமைச்சர் ஆர்.ராசாவின் இந்தக் கொள்கைக்கு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும்  ஒப்புக்கொள்ளவில்லை. ராசா விளக்கமைத்த பின்னர் அரைகுறை மனதுடன் அனுமதியளித்தனர். முதலில் வருபவர்களுக்கு முதலிடம்  என்ற கொள்கை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வகுக்கப்பட்ட கொள்கை. 2008  பெப்ரவரி முதலில் வந்த  நிறுவனங்கலுக்கு  2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது.அவற்றை வாங்கய வேறு  நிறுவனங்களுக்கு விற்பனை செய்து இலாபம் சம்பாதித்ததாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் என்ஜிஓ நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியது. ஜூன் மாதம் சிபிஐ விசாரணை ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் காப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்  இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.அதற்கு ஆதரமாக அமைச்சர் ராசாவுடன் நீரா ராடியா உரையாடிய தொலைபேசி  ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இதனை பேசும் பொருளாக்கின. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சிக்கல் உண்டானது .இந்த நேரத்தில்தான் சுப்பிரமணியன் சுவாமி களத்தில் இறங்கினார். தன்னுடைய அரசியல் எதிரிகளான காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வீழ்த்தத்திட்டமிட்டார். அமைச்சர் ஆர்.ராசாவின் மீது  பிரதமர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஹைகோட்டில் 2010 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18 ஆம்திகதி  வழக்குத் தாக்கல் செய்தார்.அந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. விடாக்கண்டன் கொடாக்கண்டனான சுப்பிரமணியன் சுவாமி செப்டம்பர் 24 ஆம் திகதி சுப்ரீம்கோர்ட்டை அணுகினார். அங்கு அவருக்கு வெற்றி கிடைத்தது.  

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் உள்ள முறைகேட்டில் அமைச்சர் ஆர். ராசாவுக்குத் தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது என அமுலாக்கத்துறை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. மத்திய கணக்கு தணிக்கைத் துறையும் பங்குக்கு ராசாவின் மீது குற்றம் சுமத்தியது. அமைச்சரின் முறையற்ற செயலால்  அரசுக்கு 1.76 இலட்சம்  கோடி ரூபா அரசாங்கத்துக்கு வருமான இழப்பு என்ற செய்தி இந்தியாவையே  உலுக்கியது. இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. .  அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில்தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலகம் ,நிதி அமைச்சு, தொலை தொடர்புத்துறை ஆகியவற்றின் மீது விமர்சனங்கள் எழுந்தன பாரதீய ஜனதாக் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தமது அரசியல் எதிரிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தன.

மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸையும்  தமிழகத்தி ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நெருக்கடி முற்றியது. 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அமைச்சர் பதவியில் இருந்து ராசா இராஜினாமாச் செய்தார். 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி   ஆர். ராசா கைது செய்யப்பட்டார். கலைஞர் தொலைக் காட்சிக்கு 200 கோடி ரூபா  கைமாறப்பட்டது, கனிமொழி கைது, கருணாநிதியின் மனைவியும் கனிமொழியின் தாயாருமான தயாளுஅம்மாள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது போன்றவற்றால் இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில்  திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் குற்றம் செய்தது. காங்கிரஸுக்கு இதில் சம்பந்தமில்லை என்ற பார்வையே மேலோங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தை  முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது. கருணாநிதியையும் அவருடைய தலமையில் உள்ள கட்சியையும் முடக்குவதற்கு 2 ஜி அலைக்கற்றை விவகாரம் கைகொடுத்தது.  ராசாவும் கனிமொழியும் சிறைக்குச்சென்றது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமானது. அவர்களைப் பிணிஅயில்  வெளியே விட்டால் ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. 18 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் பிணையில் வெளிவந்த ராசா, நீதிமன்றத்தில் மூலம்  தனக்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும்  சேகரித்தார்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அஸ்திரமாக 2ஜி வழக்கை நோக்கினர். ஆனால், சட்ட வல்லுனர்களான ராசாவுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையிலான கெளரவப் பிரச்சினையாக வழக்கறிஞர்கள் கருதினர்.  கிரிமினல்வழக்கறிஞரான ராசா, தனக்காக தானே வாதாடினார். அவருடைய குறுக்குக் கேள்விகளுக்குப் ப்திலளிக்கமுடியாமல் சாட்சிகள் தடுமாறினர்.  சாட்சிக் கூண்டில் ஏறி ராசா சாட்சியமளித்தார்.  அரச தரப்பு வழக்கறிஞர்களால் சாராவை சிக்க வைக்க முடியவில்லை. யானையைத் தடவிப்பார்த்த குருடர்களின் கதையை கூறி ராசா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் விடுதலை செய்த  நீதிபதி ஒரே ஒரு ஆதாரத்துக்காக ஏழு வருடங்கள் காத்திருநததாகத் தெரிவித்தார். அத்துடன் முடக்கப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களையும் விடுவித்தார்.

Tuesday, December 26, 2017

ஆர்.கே.நகரில் விசிலடித்த தினகரன்

  
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் தோற்கடித்து சுயேட்சை வேட்பாளரான தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வியக்க வைத்துள்ளார்.  இரட்டை இலை, உதய சூரியன் ஆகிய இரண்டு சின்னங்களையும் மையப்படுத்தியே தமிழக அரசியல்சுழன்று வருகிறது. இரண்டுசின்னங்களையும் புறந்தள்ளி புதிய சின்னத்துடன் களமிறங்கிய தினகரன் வெற்றி பெற்றது உற்று நோக்கப்படவேண்டிய அம்சமாகும்.

ஆர்.கே. நகர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. அங்கு நடைபெற்ற  தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் வெற்றி வெற்றி பெற்றதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான எதிர்ப்பலையும், பலமான வேட்பாளரும் காரணமாக அமைந்தன. ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் தினகரன் என்ற பிம்பத்துக்கு எதிராக அவரைப் போல ஜொலிக்கும் வேட்பாளரை இரண்டு திராவிடக் கட்சிகளும் களம்இறக்கத் தவறி விட்டன. மதுசூதனனுக்காக அக் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள். மருதுகணேஷுக்காக  அக்கட்சித் தலைவர்களும் வைகோ, திருமாவளவன், இடதுசாரித் தலைவர்கள் ஆகியோரும் பேசினார்கள். தினகரனுக்காக தினகரன் மட்டும் தான் பேசினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி இரண்டாகப் பிரிந்துள்ளது. பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்குள் பிரிவினை இருக்கிறது. மதுசூதனனை  வேட்பாளராக்குவதற்கு எடப்பாடி அணி  முதலில் சம்மதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள்,காங்கிரஸ், மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், இந்திய முஸ்லிம் லீக் ஆகியன   திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு  தெரிவித்தபடியால் மருதுகணேஷின் வெற்றி பிரகாசமாக இருந்தது. இந்தக்  கூட்டல் கழித்தல் எல்லாவற்றையும் பொய்யாக்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்.

இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி தோற்பது பெரிய விஷயம் இல்லை. ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்ததை ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியில் அவர் வளர்த்த கட்சியின் இரட்டை இலை தோல்வியடைந்ததுதான் ஆச்சரியமானது.

தினகரன் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மத்திய, மாநில அரசுகள் மீதான கோபம். பாரதீய ஜனதாவின் கைப்பொம்மையாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பது. தினகரன் மிக எளிமையாக பேட்டி கொடுப்பது. சிபிஐ ,வருமான வரித்துறையின் சோதனை போன்ற நெருக்கடி என்பன தினகரனைப் பேசும் பொருளாக்கின. ஆர்.கே. நகரில் நவீன முறையில் நடைபெற்ற பணப் பட்டுவாடா பிரதான காரணம்  என எதிர்க் கட்சிகள் குற்றம்  சுமத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற  இருந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பணவிநியோகமே காரணம். அந்த  ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இம்முறையும்  பணவிநியோகம் நடைபெற்றது. ஆதாரங்களுடன்  பிடித்துக் கொடுத்ததும் மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. தமக்குப் போதிய அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது.  இதே  அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான் சேஷன் அரசியல்வாதிகளை  ஆட்டிப்படைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின் போது எடப்பாடியும் தினகரனும் ஒரு அணியில் இருந்தனர். அப்போது ஒரு  வாக்காளருக்கு 4௦௦௦ ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  இப்போது அவர்களுக்கு 6௦௦௦ ரூபா தினகரனின் ஆட்களால் கொடுக்கப்பட்டது. மொத்தமாகப் 1௦௦௦௦ ரூபா என தினகரன் தரப்பினால் கொடுக்கப்பட்டது. இரட்டை இலையையும் வைத்துக்கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பணத்தை வரி இறைத்தது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் வெற்றி தோல்வி இரண்டையும்  ஸ்டாலின் ஒன்றாகத்தான் பார்க்கிறார். பணத்தை வாரி இறைத்து ஒரு உறுப்பினரைப்  பெறுவதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. பணம் கொடுத்து பெறும் வெற்றியை விட தோற்பது மேல் என்றார். அதுதான் நடந்துள்ளது. திமுக தோற்கவில்லை. தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து விட்டது எனக் கூறினார். ஆனாலும் தனது கட்சியில் வாக்கு வங்கி  எங்கே  போனது என்பதை அறிய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களைவிட அதிகளவான வாக்குகளைப் பெற்றுள்ளது. பாரதீய ஜனதா மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நோட்டாவுக்கு  அடுத்த இடத்தில் மத்தியில் ஆளும் தேசியக் கட்சி இருக்கிறது. விஜயகாந்த், ராமதாஸ்,வாசன் ஆகியோரின் கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப்  புறக்கணித்தன. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி, நாம் தமிழர் ஆகிய கட்சிகள்பெற்ற வாக்குகளைவிட அதிகளவான வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார்.  ஜெயலலிதாவை விட அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.  இடைத் தேர்தலில் இப்படி ஒரு முடிவு வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால்,  பொதுத் தேர்தலில் இதனை எதிர்பார்க்க முடியாது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். இந்த வெற்றி அவருக்கு நடைபெற உள்ள பல சோதனைகளின் ஆரம்பமே தவிர முடிவு அல்ல. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் . சின்னத்தையும் கைப்பற்றுவேன்,  மூன்று மாதங்களில் தமிழக ஆட்சி கவுழும் சிலிப்பர் செல்கள் வெளிவருவார்கள்  என சபதமிட்டுள்ளார். தினகரனின் பக்கம் இருந்துவிட்டு ஓடிப்போன நாடாளுமன்ற உறுப்பினர் திரும்ப வந்துவிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து தனி ஒருத்தியாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தினகரனைச்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்த சசிகலாவை தினகரன் சந்தித்ததை ஜெயலலிதாவுக்கு விசுவாசமான சசிகலாவின் குடும்பத்தால் ஜீரணிக்கமுடியவில்லை. மதில் மேல் பூனையாக அல்லாடும் தமீம் அன்சாரி,,கருணாஸ்.தமிழரசு ஆகியோர் தினகரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தினகரன் வெற்றி பெற்றதும் முதல்  ஆளாக விஷால் வாழ்த்துத் தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் ராதாரவி தினகரனை வாழ்த்தியுள்ளார். எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் நடவடிக்கைகள்  பிடிக்காது ஒதுங்கி இருப்பவர்கள் தினகரனின் பக்கம்செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் இணைந்து நடத்திய கூட்டத்துக்கு சில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லவில்லை. அவர்களும் தினகரனின் ஆட்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினகரனின் வெற்றி தமிழகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. பன்னீரை வெளியேற்றிவிட்டு முதலமைச்சராவதற்கு தினகரன் முயற்சிப்பார். தினகரனுக்கு உள்ள செல்வாக்கினால் பாரதீய ஜனதாக் கட்சி தினகரனின் கையைப் பிடிக்க முயற்சிக்கலாம். அதற்கு அவர் மறுத்தால், அவருக்கு எதிரான வழக்குகளைத் துரிதப்படுத்தி தினகரனை  சிறைக்கு அனுப்பலாம். பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பாரதீய ஜனதாவிடம் தினகரன் அடி பணியலாம். இவை எல்லாம் தினகரனின் முடிவில்தான் தங்கி உள்ளது. 


Thursday, December 21, 2017

பாரதீய ஜனதாவின் இரும்புக்கோட்டையில் சவால் விட்ட காங்கிரஸ்

இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும்     பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸிடம் இருந்த இமாசலப் பிரதேசத்தை பாரதீய ஜனதா கைப்பற்றியுள்ளது. குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. வெற்றி பெற்றதை பாரதீய ஜனதாவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.  இமாசலப்பிரதேசம் பறிபோனதைப் பற்றி காங்கிரஸ் அதிகம் கவலைப்படவில்லை.குஜராத்தில்,  பாரதீய ஜனதா மயிரிழையில் தப்பியதை நம்பிக்கையுடன் நோக்குகிறது. பாரதீய ஜனதாவின் இமாசலப்பிரதேச முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. முதல்வரைத்  தேடவேண்டிய நிலையில் பாரதீய ஜனதா இருக்கிறது. 

குஜராத்தில் முதல் கட்ட வாக்களிப்பில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் கட்ட வாக்களிப்பில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது. மோடி அமித்ஷா என்ற இரண்டு பெரும் ஆளுமைகளின் மாநிலமான குஜராத்தில் பெற்ற வெற்றி பாரதீய ஜனதாவுக்கு போதுமானதாக இல்லை. 2012 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்போடும்போது பாரதீய ஜனதாவின் வாக்கு வீதமும் உறுப்பினர் தொகையும் குறைவடைந்துள்ளது. கிராமப்புறங்களில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. நகரங்களில் பாரதீய ஜனதா செல்வாக்குடன் இருக்கிறது.
குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 22 வருட காலம்  குஜராத்தை ஆட்சி  செய்த பாரதீய ஜனதா அங்கு செய்த அபிவிருத்திகளை முன் நிறுத்தி வாக்குக் கேட்கவில்லை. ராகுல் இந்து இல்லை, மன்மோகன் பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து சதி  செய்கிறார், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம் முதலமைச்சராவார்  போன்ற கீழ்த்தரமாக மோடி, பிரசாரம் செய்தார்.

காங்கிரஸின் பிரசாரம் பாரதீய ஜனதாவின் கொள்கைகளால் இந்தியாவும் குஜராத்தும் சந்தித்த  பின்னடைவுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டது. பணமதிப்பீட்டு இழப்பு ஜிஎஸ்ரி வரிவிதிப்பு என்பனவற்றைப் பற்றி காங்கிரஸ் விரிவாகப் பிரசாரம் செய்தது. என்றாலும் கடைசி நேர ஜிஎஸ்ரி வரியில் மத்திய அரசு மற்றம் செய்ததால் குஜராத் வாக்காளர்கள் மனம்  மாறிவிட்டனர்.  விவசாயிகளும் வர்த்தகர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள்  என காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருந்தது. மோடியின் கடைசி நேர பிரசாரத்தால் வர்த்தகர்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர். மோடியின் மாநிலம் என்பதால் அவரது தந்திரம் குஜராத்தில் பலித்தது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மோடி என்ற பெயர் முன்னிலை பெற்று வெற்றியைத் தேடித்தந்தது. குஜராத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த மோடி என்ற சொல் அடுத்த பொதுத் தேர்தலில் வலுவிழந்துவிடும்.

மோடியின் மாவட்டமான மேன்சலாவில்  ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் மட்டும் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மோடியின்  தொகுதியிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.இது பரதீய ஜனதாவுக்குப் பலத்த அடியாகும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியேறியதே தோல்வியின் பிரதான காரணியாகும். 2017, 2012  ஆம் ஆண்டுகளில் காங்கிரஸுடன் இணைந்து  தேர்தலைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் 2017,  ஆம் ஆண்டு மூன்று தொகுதிகளிலும் , 2012   ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தோல்வியடைந்ததால் 72  தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. . இதனால் காங்கிரஸுக்கு சேர வேண்டிய வாக்குகள் சிதறிவிட்டது.

குஜராத்தில் பல தொகுதிகளில் 200 முதல்  20௦௦ வாக்கு வித்தியாசத்தி தான் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 16 தொகுதிகளில் பாரதீய  ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 33 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸின் பக்கம் இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில்  ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டங்கள் எதிலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. குஜராத்தில் வலுவாகக் கால் ஊன்ற வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுத் தேர்தலில்   115  தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய  ஜனதா இப்போது 99  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு 61  தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இப்போது 77   .தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தின் முதல்வரான விஜய் ரூபவானிக்கு எதிராகக் களம் இறங்கிய ஜிக்னேஷ் மேத்வானி, ஹர்த்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூவருடனும் இணைந்தது காங்கிரசுக்கு இராஜதந்திர ரீதியில் பலமாக உள்ளது. தவிர குஜராத்தில் இருக்கும்முக்கிய இளம் தலைவர்களையும் ராகுல் தனது பக்கம்  இழுத்துள்ளார். குஜராத்தில் செல்வாக்குச் செலுத்துபவர்களுடன் நெருக்கமாக இணைந்தால் அங்கு காங்கிரஸ் வலுவாகக் கால் ஊன்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். பாரதீய  ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் அண்மையில்  நடைபெற்ற ஆறு சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி  பெற்றது. கடந்த காலத்  தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரதீய  ஜனதா பெற்ற வாக்குகளின் சத வீதம் குறைவடைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு கர்நாடகா,மத்தியப்பிரதேசம்,சட்டீஸ்கர், ராஜஸ்தான், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து,மிசோராம் ஆகிய எட்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன, அங்கெல்லாம் காங்கிரஸ் மிகவும் பலமானதாக இருக்கிறது. பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம்,சட்டீஸ்கர். ராஜஸ்தான் ஆகியவற்றில் பாரதீய ஜனதாவும் கர்நாடகத்தில் காங்கிரஸும் ஆட்சி செய்கின்றன. அங்கு ஆளும் கட்சிகள் மக்களின் எதிர்ப்பலைகளை எதிர் நோக்க வேண்டிய  நிலை உள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. விவசாயிகளின் பிரச்சினை, வேலை இல்லாத இளைஞர்களின் எதிர்பார்ப்பு  என்பன விஸ்வரூபமாக முன்னிற்கின்றன. இவர்களுக்கான சரியான தீர்வைக் கொடுப்பவர்கள்தான் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.


Monday, December 18, 2017

கெளரவப்பிரச்சினயான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தமிழக அரசியல் அரங்கில் ஆர்.கே.நகர் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முதலமைச்சரின் தொகுதி என்ற மிடுக்குடன் இருந்த ஆர்.கே.நகர், இலஞ்சம் தலை விரித்தாடும் தொகுதியாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்காளர்களுப் .பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்ட களம்  இறங்கியுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக் கோட்டையான ஆர்.கே. நகரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்  உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  ஸ்டாலினுக்கு ஆர்.கே. நகர் வெற்றி அத்தியாவசியமானது. கருணாநிதி ,ஜெயலலிதா ஆகிய இரண்டு அரசியல் ஆளுமைகளும் இல்லாத இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல் தலைவர் ஸ்டாலின் வழிநடத்துகிறார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது, தினகரன் தனி ஒருவனாக நின்று அனைவரையும் எதிர்த்துப் பிரசாரம் செய்கிறார். எடபடியும் பன்னீரும் ஒன்றாக நின்று தேர்தல் பரப்புரை செய்கின்றனர். இரண்டு அணிகளும் இனைந்தன. மனங்கள் இணையவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான ஆர்.கே. நகரைக் கைப்பற்றித் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என ஸ்டாலின் கங்கணம் கட்டியுள்ளார். ஜெயலலிதாவின் தொகுதியைத் தக்க வைக்க வேண்டிய கடமைப்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. கழகமும் சின்னமும் அங்கே இருந்தாலும் தொண்டர்கள் எனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என அடித்துச்சொல்கிறார் தினகரன்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பளராக  ஆர்.கே. நகரைச்சேர்ந்த மருதுகணேஷ், களம்  இறங்கி உள்ளார்.  ஆர்.கே. நகரில் இரண்டு முறை வெற்றி பெற்ற மதுசூதனன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பலறக்கப் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளராக தினகரன், வளம் வருகிறார்.நாம் தமிழர் கட்சியும் பாரதீய ஜனதாவும் தமது கட்சியின் வேட்பாளர்களைக் களம் இறக்கி உள்ளனர். நான்கு தினகரன், மூன்று மதுசூதனன், மூன்று ரமேஸ், இரண்டு பிரேம்குமார் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்கள். சின்னத்தைப் பார்க்காது பெயரைப்பார்த்து வாக்களித்தால் பிரதான வேட்பாளர்களின் வாக்குகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பன்னீரும் எடப்பாடியும் எதிரும் புதிருமாக இருந்தனர். பன்னீர் அணியின்வேட்பளராக மதுசூதனனும் எடப்பாடியின் அணி வேட்பாளராக தினகரனும் போட்டியிட்டனர். இன்று பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக நின்று தினகரனை எதிர்த்துப் பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்தில் த்சம்ச்து கட்சியும் இருக்கிறது என்பதனை வெளிக்காட்டுவதற்காக பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்த கங்கை அமரன் இம்முறை பினவங்கி விட்டார். ஆகையால் இன்னொரு கட்சியில் இருந்து தாவியவரை பாரதீய ஜனதா வேட்பாளராக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் தம் பங்குக்கு ஒருவரை நிறுத்தியுள்ளது.

ஜெயலலிதா இருந்தபோது பிரபலமான எந்த ஒரு கட்சியுடனும்  கூட்டணி சேரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒன்றாக இருந்தன. வைகோ,விஜயகாந்த்,திருமாவளவன்,இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து போட்டியிட்டனர். ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் விஜயகாந்தைத் தவிர அமர்றைய அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலான போட்டியாக இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தினகரனுக்கும் இடையிலான போட்டியாக ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மாறி விட்டது. வெற்றி பெறவிட்டலும் இரண்டாம் இடம் யாருக்கு என்ற கெளரவப் பிரச்சினையாக பிரசாரம் செய்யப்படுகிறது.  கடந்த முறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடினார் தினகரன். அதில் தலையிட முடியாது என நீதிமன்றம்  மறுத்துவிட்டது. தொப்பி சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு அதிகளவு பணம் கொடுக்கப்பட்டதால் 29 சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தைத் தமக்கு வழங்கக்கோரினர். இவர்களுடன் இரண்டு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. கட்சியில் கோரிக்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு தொப்பி வழங்கப்பட்டது.

  தினகரனின் விருப்பமாக  விசில்,கிரிக்கெற் மட்டை என்பன இருந்தன. தினகரனின் விருப்பத்தை  நிறைவேற்றக்கூடாது என்பதற்காக அவருக்கு குக்கர் சின்னமாக வழங்கப்பட்டது. மக்கள் மனதில் மிக இலகுவாக பதியக்கூடியகுக்கரால் தினகரன் மகிழ்ச்சியடைந்துள்ளார். பன்னீரும் எடப்பாடியும் இரட்டை  இலையை நம்பி பிரசாரம் செய்கின்றனர். புதிய சின்னமான குக்கரை பிரபலயப் படுத்துவதில் தினகரன் முந்திவிட்டார்.

வாக்காளருக்குப் பணம்  கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ஆதரத்துடன் பிடித்து உரிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.  தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இப்படியான தில்லு முல்லுகளைக் கண்டு பிடிப்பதற்காக கூடுதலான பொலிஸார், பறக்கும் படை,துணை இராணுவம் என்பன கலத்துள் ரோந்து வருகின்றன. பணம் கொடுப்பவர்கள் யாரும் அவர்களின் கண்ணில் சிக்கவில்லை. ஆதாரத்துடன்  பிடித்துக் கொடுத்தாலும் ஆளும் கட்சியைச் சேந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது.  இரண்டாவது முறையும் இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டால் அது மிகப்ப பெரிய அவமானமாகும். கொடுக்கிற பணத்தை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆர்.கே. நகர் வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. வாங்கிய சொற்ப பணத்துக்காக தமது வாக்கை விற்பப்போகிறார்களா என்பதை அறிவதற்கு தேர்தல் முடிவுவரை காத்திருக்க வேண்டும்.  நடக்கப்போவது இடைத் தேத்தல் என்றாலும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பம் என்றே கருத வேண்டி உள்ளது.     

Thursday, December 14, 2017

புயலைக் கிளப்பிய விஷாலின் அரசியல் விளையாட்டு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் தயாராகிய வேளையில்  சுயேட்சை வேட்பாளராக நடிகர் விஷால் குதித்தது  அனைவரையும்  ஆச்சரியப்பட வைத்தது. தமிழக அரசியலில் இருந்து சினிமாவைப் பிரிக்க முடியாது. தமிழக அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ஆகிய நால்வரும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

சினிமாவுடன் தொடர்புடைய  பலர் அரசியல்வாதியாகவும் இருக்கின்றனர். அரசியல்வாதிகள் சிலர் சினிமாத் தயாரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் செயற்படுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். தீவீர அரசியலில்  இறங்கப் போவதாக பந்தா காட்டிவிட்டு ரஜினி அமைதியாகிவிடுவார். விஜயிடமும் அரசியல் ஆசை இருக்கிறது. அவருடைய தகப்பன் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கமல் தனது அரசியல் கருத்துக்களை டிவிட்டரில் தெறிக்க விடுகிறார். கமலும் ரஜினியும் அரசியலில் குதிக்க நாள் பார்த்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென விஷால் அரசியல்வாதியானார்.

விஜயின் படம் வெளியாகும் போது பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவதில்லை.விஜயின் படம் வெளியாகும் அதே தினத்தில் தனது படத்தை அடம் பிடித்து வெளியிடுபவர் விஷால்.இளைய தளபதி விஜய்க்குப் போட்டியாக புரட்சித் தளபதி என தனது பெயருக்கு முன்னால் போட்டு அழகு பார்த்தவர் விஷால். எதிர்ப்பு வலுவடைந்ததால் புரட்சித் தளபதியைக் கைவிட்டார்.

விஷாலுக்குப் பின்னால் இருபவரை அறிவதற்கு திரை உலகமும் அரசியல் களமும் ஆர்வமாக இருந்தன. டுவிட்டரில் அரசியல் நடத்தும் கமலின் பிரதிநிதியாக விஷால் களம் இறங்கியதாக கருதப்பட்டது. நடிகர் சங்கத்தில் தலைவராகவும் செயலாளராகவும்  இருந்த சரத்குமாரையும் ராதாரவியையும் வெளியேற்றி புதிய நிர்வாகத்தை அமைத்ததில் விஷாலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக கமல் இருந்தார். நடிகர் சங்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலுடைய குழு கைப்பற்றியது. நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் குதித்ததாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டது.

கமல்,ரஜினி, விஜய் ஆகியோருக்கு இருப்பது போன்ற தீவீர வெறிகொண்ட ரசிகர் பட்டாளம் விஷாலுக்கு இல்லை. எம்.ஜி ஆரை முதலமைச்சராக்கியது அவரது ரசிகர்கள் தான். அதன் பின்னர்தான் ரசிகர்கள் தொண்டர்களாகினர். அதன் பின்னர் அப்படி ஒரு நிலைமை எந்த ஒரு நடிகருக்கும் ஏற்படவில்லை. விஷாலின் அரசியல் பிரவேசத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பதறியது. தினகரனின் தூண்டுதலால் அரசியலில் களம் புகுந்த விஷாலால்  தமது வாக்கு வங்கி சிதறிவிடும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அச்சம் அடைந்தனர்.

ஜெயலலிதாவின் மரணத்தின் பிற்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி சிதறிவிட்டது. பன்னீர் குழு ,எடப்பாடி குழு என பிரிந்ததனால் தொண்டர்கள் திகைத்தனர். இப்போது அவர்கள் இணைந்தாலும் தினகரனின் போராட்டம் அவர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது. ஆர்.கே.நகரில் உள்ள மக்களில் 20 சத விகிதத்தினர் தெலுங்கு பேசும் மக்கள்.அவர்களில் அதிகமானோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.  அவர்களின் வாக்குகளைக் கவருவதற்காக தினகரனின் திட்டத்தின் படி விஷால் அரசியல் அவதாரம் எடுத்ததாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டினர்.

சினிமா என்ற மாயை விஷாலை முன்னிலைப்படுத்தியது. விஷால் தன்னை அரசியல்வாதியாகவே நினைத்துக் கொண்டார். கமராஜர்,அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தபின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போதுதான் சினிமாவில் வரும் தேர்தலுக்கும் நிஜமான தேர்த;லுக்கும் உள்ள வித்தியாசத்தை விஷால் அறிந்துகொண்டார். வரிசையில் நின்று டோக்கன் வாங்கவேண்டும் என வேட்பு மனுத்  தாக்கல் செய்யக் காத்திருந்தவர்கள் தெரிவித்தார்கள். டோக்கன் வாங்கி 4௦ ஆவது ஆளாக தேர்தல் அதிகரிவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் விஷால்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்பு மனுவில் அந்தத் தொகுதியில் வசிக்கும் 10 பேர் முன் மொழிந்து  கையெழுத்திட வேண்டும் என்பது விதி விஷாலை முன் மொழிந்தவர்களில் சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அது தமது கையெழுத்து அல்ல எனத் தெரிவித்ததால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நம்பிக்கையான 10 பேரைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாதவர் என்று விஷாலின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  மிரட்டியதால் தான் அவர்கள் இருவரும் அப்படிச்சொன்னர்கள் என தொலைபேசி ஆதாரத்துடன் விளக்கமளித்தார்.

சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.  .விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் கையெழுத்திட்டார்களா என்ற சந்தேகத்துக்கு  விடை தெரியவில்லை.  தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம்  விஷால் கெஞ்சி மன்றாடினார். இரவு 9 மணியளவில் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சந்தோஷமடைந்த விஷால் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்கள் முன் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குச்சென்று விட்டார்.  இரவு 11 மணிக்கு விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

விஷாலின் வேட்பு மனுவை நிரகரித்த தேர்தல் அதிகாரி, விஷால் வேண்டியதால் அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் அதனை ஏன் நிராகரித்தார் என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. முடிவெடுக்கும் முழு அதிகாரம் தேர்தல் அதிகாரியிடம் உள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை விஷாலின் கோரிக்கைக்கு இணங்க ஏற்றுக்கொண்டார். பின்னர் யருடைய நெருக்குதலால் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையில் அனைவருக்கும் சந்தேகம் உள்ளது

தமிழக தலமைத் தேர்தல் அதிகாரி லக்கானியிடம்  விஷால் முறையிட்டார். கையெழுத்திடவில்லை என தெரிவித்த  இருவரும் நேரில் வந்து விளக்கமளித்தால் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என கால  அவகாசம் கொடுத்தார்.  தேர்தலில் தான் போட்டியிடுவதைவிட அவர்களின் பாதுகாப்பு முக்கியம் என விஷால் தெரிவித்தார். சினிமாவில் ஏழைகளுக்கு உதவும் கதாநாயகன் நிஜத்தில் பின்வாங்கிவிட்டார். ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியின்  நடவடிக்கை அநீதியானது என்பதை உணர்ந்த தமிழகத் ,தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி அவரை  நீக்கி விட்டு பிரவீன் நாயரை, ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியாக நியமித்தார். எட்டு மாதங்களுக்கு முன்னர் இதே ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகரியகக் கடமை புரிந்தவர் பிரவீன் நாயர். தொகுதியில் நடந்த பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாததால் அன்றைய இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது.

  விஷாலில்  அரசியல் பிரவேசம் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் பிரச்சினையை  உருவாக்கியது. தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சார்பானது அல்ல. இடைத் தேர்தலில் போட்டியிடும் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என சேரன்  போர்க்கொடி தூக்கி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். விஷாலுக்கு எதிரானவர்கள் அனைவரும் சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன்   இராஜினாமாச் செய்தார். நடிகர் சங்கத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சரத்குமார், ராதாரவி ஆகியோரை வெளியேற்றி விட்டு நாம் பதவி  ஏற்றோம். நடிகர் சங்க செயலாளரான விஷால், தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சேரனின் போராட்டம் கைவிடப்பட்டது. பொன்வண்ணன் தனது இராஜினாமாவை  வாபஸ் வாங்கி மீண்டும் பதவியில் தொடருவதாக அறிவித்தார். இவை தற்காலிக முடிவா அல்லது நிரந்தரமான முடிவா  என்பதை விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் முடிவு செய்யும்.

நான், அரசியல்வாதியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை.  மக்களுக்குச்சேவை செய்ய சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன் என்ற விஷாலின் விளக்கம் குழப்பமாக இருக்கிறது. கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி.  சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி இல்லை என்ற விஷாலின் கருத்தை அரசியலைப் பற்றித் தெரியாதவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியலைப் பற்றிய தெளிவு எதுவும் இல்லாமலே விஷால் அரசியலில் இறங்கியுள்ளார். அரசியல்வாதி ஒருவர்  வேட்புமனுவைத்  தாக்கல் செய்யும்போது அவருடைய கட்சியைச்சேர்ந்த இன்னொருவர்  வேட்புமனுத் தாக்கல் செய்வார். அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டால் மற்றவர் தனது  வேட்புமனுவை வாபஸ் பெறுவார். மாறாக நிராகரிக்கப்பட்டால், தனக்குப் பதிலாக வேட்புமனுத் தாக்கல் செய்தவரை அவர் ஆதரிப்பார். இதனைத் தெரிந்து கொள்ளாத விஷால்,  வேட்புமனுத் தாக்கல் செய்வதிலே தோல்வியடைந்தார்.

ஆர்.கே. நகரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கப்போவதாக அறிவித்த விஷால் அதைப்பற்றிய விபரம் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. விஷாலின் அரசியல் களேபரத்தால் ஆர்.கே. நகற், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் சுழன்றடித்த புயல் ஓய்ந்துவிட்டது. அது  சுறாவளியாக மாறுமா அல்லது அமையுமா என்பதை விஷால்தான் முடிவு செய்ய வேண்டும்.


Thursday, November 30, 2017

இரட்டை இலையும் இடைத்தேர்தலும்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இரத்தத்தில் ஊறிய சின்னம். மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் மக்கள் தலைவனானதும் தன்னை நம்பிய தொண்டர்களுக்கு அடையாளம் காட்டிய சின்னம். வலது கையைத் தூக்கி இரண்டு விரல்களை விரித்து எம்.ஜி.ஆர் காட்டும்போது அது இரட்டை இலையின் அடையாளம் என்பதைத் தொண்டர்கள் புரிந்து கொண்டனர். எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இரட்டை இலைச்சின்னம். தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு முறை முடக்கப்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜெயலலிதாதான்  பின்னணியில் இருந்தார்  என்பதுதான் விதியின் விளையாட்டு.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவி ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலா அணி ஓ.பன்னீர்ச்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, சிறைக்குச்செல்ல முன்பு தனது பிரதிநிதியாக டி.டி.தினகரனை நியமித்தார்.
சசிகலாவின் பெயர் மறைந்து தினகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி பேசாமடைந்தையானார்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அடையாளம் கட்டிய இரட்டை இரட்டை இலைச்சின்னம் வெற்றி தரும் என தினகரன் நம்பினார்.

தினகரனின் நம்பிக்கைக்கு பன்னீர் முட்டுக்கட்டை போட்டார். எடப்படியின் அணியில் இருந்த முக்கியஸ்தர்கள் சிலர் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். பன்னீர் அணியின் கோரிக்கையால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. வாக்களர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இரட்டை இலையின் மகாத்மியத்தைப்  புரிந்துகொண்ட எடப்பாடி அணி, பன்னீர்  அணியுடன் இணங்கிப்போக விரும்பியது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அறிய விசாரணைக் கமிஷன், சசிகலாவையும் மன்னார்குடி குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றுக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டினார்.

எடப்படியின் தலைமையில் இருந்தவர்கள் தினகரனின் தலைமையில் பிரிந்து சென்றார்கள். இரட்டை இலைச்சின்னத்தைத் தமக்குத் தரவேண்டும் என கொரிய பன்னீர் தரப்பு உரிய ஆவணங்களை தேர்தல்  தலைமை அலுவலகத்துக்குக்  கொடுத்தது. ஏட்டிக்குப் போட்டியாக எடப்படியும் தினகரனும் ஆவணங்களுடன் தேர்தல் தலைமை அலுவலகத்தை நாடினார்கள். இவர்களுக்கிடையில் தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

எடப்பாடி,பன்னீர்,தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்திருந்தது. ஒன்றரைக்கோடி தொண்டர்களும் தமது பக்கம் என்றே மூவரும் பிரசாரம் செய்தார்கள். எடப்பாடியின் தலைமையிலான தமிழக அரசைத் தூக்கி ஏறிய வேண்டும் என பன்னீரும் தினகரனும் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுக்காது, தமிழக அரசைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும்  கருத்துமாக இருந்தது.

எடப்பாடியையும் பன்னீரையும்  ஒற்றுமையாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருந்தது. அவர்கள் இருவரும் பிரிந்திருந்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக இருக்கும் என பாரதீய ஜனதா கருதியது. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இருவரும் இணைத்து வைக்கப்பட்டார்கள். பிரிந்தவர்கள்  இணைந்தார்கள். கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒருங்கினப்புக்குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்ச்செல்வம்  ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவும் இரட்டை இலையும் இல்லாத தேர்தலை எதிர்கொள்ள அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தயங்கியது. எட்டு மாதங்களின் பின்னர் இரட்டை இலைச்சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பெயரும் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. அவைத் தலைவர் மதுசூதனனின் அணிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது. எடப்படியும் பன்னீரும் இணைந்தாலும் அறுதிப் பெரும்பனமைக்குரிய பலம் அவர்களிடம் இல்லை. ஆனால்,அதிகளவான  உறுப்பினர்களும், நிர்வாகிகளும் அவர்கள் பக்கம் இருப்பதால் சின்னமும் பெயரும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தையும் கழகப் பெயரையும் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்ட மறுநாள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரச இயந்திரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய பதில்  இதுவரை கிடைக்கவில்லை.

இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததால் வெற்றி பெறலாம் என எடப்பாடியும் பன்னீரும் நினைக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது இல்லை. ஜெயலலிதா சொல்வதை அன்று அனைவரும் வேதவாக்காக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றைய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் சொல்லை நிர்வாகிகள் தட்டிக் கழிக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு முன்னர் மனுத் தாக்கல் செய்த மருது கணேஷையே திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அறிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி அணியில் தினகரனும் பன்னீர் தரப்பில் மதுசூதனனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தினகரன் இல்லாததால் மதுசூதனன் வேட்பளராக அறிவிக்கப்படுவார்  என்றே அனைவரும் பார்த்தனர். ஆனால், விரும்பு மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை. அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர். விருப்பு மனு என்ற  நடைமுறையை அவர் பின்பற்றவில்லை. மதுசூதனன் போட்டியிடுவதை எடப்பாடி அணி விரும்பவில்லை என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா உட்பட 20 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் வேட்பளராக மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர் தெரிவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பலத்த போட்டி நடைபெற்றது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை துளிர்ப்பதும் முடங்குவதும் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. தங்களுடைய புகாருக்கு விளக்கம் தெரிவிக்காமல் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு இரட்டை இலையைக் கொடுத்தது தவறு என தினகரன்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தினகரன் இப்படி ஒரு காரியம் செய்வர் என்பதை உணர்ந்த பன்னீர் தரப்பு முன்கூட்டியே  நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இரட்டை இஅலையெக் கேட்டு யாராவது முறையிட்டால்  எங்களைக் கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.  

இரட்டை இலைக்காகவே  எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர். பிரிந்த அணிகள் இணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்ற உண்மையை டிவிட்டர் வெளிப்படுத்தியுள்ளது. எடப்பாடி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு பன்னீர் தரப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதே போன்ற பல உள் குத்துகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சோதனையில் பன்னீர் தரப்பு வெற்றி பெற்று விட்டது. இந்த வெற்றி நிரந்தரமா இல்லையா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.

வர்மா